தனது மகளுக்கு பாலியல் தொல்லை அளித்தவர்களை தட்டிக் கேட்ட தந்தை குத்திக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

டெல்லியில் உள்ள மோதி நகரில் கடந்த சனிக்கிழமை இரவு இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது. அப்பகுதியில் வசிக்கும் 26 வயது பெண் ஒருவர், அன்றைய இரவு, மருத்துவமனைக்கு தனது தந்தையுடன் சென்றுவிட்டு, வீடு திரும்பியுள்ளார். 

அந்த பெண்ணின் வீட்டின் அருகில் வந்தபோது, பக்கத்து தெருவில் 4 பேர் கொண்ட கும்பல் ஒன்று, அவர்களை வழிமறித்து, தொல்லை கொடுத்துள்ளனர். அவர்களிடம் இருந்து தப்பிய தந்தை, வீட்டிற்குச் சென்று, தனது மகளை விட்டுவிட்டு, மீண்டும் பக்கத்து தெருவிற்குச் சென்று, அந்த கும்பலை கண்டித்துள்ளார். அப்போது அந்த கும்பலில் இருந்த ஒருவன் அடித்ததால் வாக்குவாதம் முற்றி  பதற்றமடைந்த அவரது மகள், தனது சகோதரனையும் அழைத்துக் கொண்டு அந்த இடத்திற்கு விரைந்து வந்துள்ளார்.

அப்போது, குறிப்பிட்ட 4 பேர், மற்றும் அந்த பெண்ணின் சகோதரன் மற்றும் அவரது தந்தையை சராமரியாகக் கத்தியால் குத்தியுள்ளனர். இதில், அவரது தந்தை நிகழ்விடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். சகோதரன் ரத்தக் காயங்களுடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். இந்தப் கொடூரமான சம்பவம்  நிகழ்ந்தபோது, அவ்வழியே சென்ற பொதுமக்கள் யாருமே தடுக்காமல் வேடிக்கை மட்டும் பார்த்து கடந்து சென்றுள்ளனர்.

அதோடு சென்றாற்களா என்றால் அதுதான் இல்லை, அவர்கள் பலர் இச்சம்பவத்தை வீடியோ எடுத்துள்ளனர். ஆனால், யாரும் அவர்களுக்கு உதவி செய்யவில்லை எனக் கூறப்படுகிறது. அந்த பெண்ணின் பக்கத்து வீட்டுக்காரர் மட்டும் காப்பாற்ற போராடியுள்ளார். அவரது முயற்சி பலன் தரவில்லை. இச்சம்பவம் பற்றி டெல்லி முதல்வர் அர்விந்த் கெஜ்ரிவால் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.