கற்பழிப்பு வழக்கில் முன்னாள் முதலமைச்சர் மீது வழக்குப் பதிவு …. இன்று கைது செய்யப்படுவாரா?
கேரளாவில் சோலார் மின்தகடு ஊழல் புகழ் சரிதா நாயர் அளித்த புகாரின் அடிப்படையில் அம்மாநில முன்னாள் முதலமைச்சர் உம்மன் சாண்டி மற்றும் வேணுபோபால் எம்.பி. ஆகியோர் மீது கற்பழிப்பு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அவர்கள் இருவரும் இன்று கைது செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
கேரளாவில் உம்மன்சாண்டி தலைமையிலான முந்தைய காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் அதிர வைத்த ஊழல், சோலார் பேனல் ஊழல் என்று அழைக்கப்படுகிற சூரிய மின் தகடு ஊழல்.
சூரிய ஒளியில் இருந்து மின்சாரம் உற்பத்தி செய்யும் தகடுகளை பதித்து தருவதாக மக்களிடம் பல கோடி ரூபாய் வசூலித்து ஏமாற்றி விட்டதாக சரிதா நாயர், பிஜூ ராதா கிருஷ்ணன் உள்ளிட்டோர் மீது புகார் எழுந்தது. இந்த ஊழலில் அவர்களுக்கு உதவிக்கரம் நீட்டுவதற்கு அப்போதைய முதலமைச்சர் உம்மன் சாண்டி, மின்சார அமைச்சர் உள்ளிட்டோர் லஞ்சம் பெற்றதாக குற்றச்சாட்டு எழுந்தது.
இந்நிலையில் உம்மன் சாண்டி மற்றும் வேணுகோபால் ஆகியோர் தனக்கு உதவி செய்வதாக கூறி தனனை பாலியல் பலாத்காரம் செய்ததாக சமீபத்தில் கேரள குற்றப்பிரிவு காவல்துறையிடம் சரிதாநாயர் புகார் கொடுத்திருந்தார். அந்தப் புகாரில் கடந்த 2013-ம் ஆண்டு உம்மன் சாண்டியை அவரின் அதிகாரப்பூர்வ இல்லத்தில் சந்திக்கச் சென்றபோது தன்தொழிலுக்கு உதவுவதாகக்கூறி தன்னை பலாத்காரம் செய்தார் என்று தெரிவித்துள்ளார்.
அந்த புகாரின் பேரில் உம்மன்சாண்டி, கே.சி.வேணுகோபால் ஆகியோர் மீது தற்போது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அவர்கள் இருவரும் கைது செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஏற்கனவே இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்த அமைக்கப்பட்ட சிவராஜன் ஆணையம் அளித்த 1,073 பக்க அறிக்கையைக் கடந்த செப்டம்பர் மாதம் அளித்தது. அதில் சரிதாவின் சோலார் பேனல் தொழில்நிறுவனத்தை ஊக்கப்படுத்த அவரிடம் அரசியல் தலைவர்கள் பாலியல் ரீதியான சலுகைகளைக் கேட்டுள்ளனர். சரிதா குறிப்பிட்டுள்ள அனைவர் மீதும் விசாரணை நடத்த வேண்டும் எனத் தெரிவித்திருந்தார்.
பாலியல் பலாத்கார வழக்கு செய்யப்பட்ட கே.சி.வேணுகோபால் தற்போது ஆலப்புழா தொகுதி எம்.பி.யாகவும், கர்நாடக மாநில காங்கிரஸ் பொறுப்பாளராகவும், அகில இந்திய காங்கிரஸ் பொதுச் செயலாளராகவும் உள்ளார். முன்னாள் முதல்வரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான உம்மன்சாண்டி மீது பலாத்கார வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது கேரள அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.