திருப்பூர் காவிலிபாளையம் பிரிவு பகுதியை சேர்ந்தவர் பாலமுருகன் . இவருக்கு கோகிலா என்ற மனைவியும், 13 வயதில் ஒரு மகனும் உள்ளனர். பாலமுருகன் அண்ணா காலனி பகுதி தி.மு.க. மாணவரணி துணை அமைப்பாளராக இருந்து வந்தார். 

மேலும், காலேஜ் ரோட்டில் உள்ள ஒரு கட்டிடத்தின் மேல்மாடியில் 4 ஆண்டுகளாக நிதிநிறுவனமும் நடத்தி வந்துள்ளார்.இந்த நிலையில் வழக்கம் போல நேற்று மதியம் நிதி நிறுவனத்திற்கு  வந்தார். பின்னர் இரவு 8 மணியளவில் நிதி நிறுவனத்தில் இருந்து கீழே இறங்கி வந்துள்ளார்.

அப்போது அங்கு 2 மோட்டார் சைக்கிள்கள் வந்து நின்றுள்ளது. அதில் இருந்து இறங்கிய 4 பேர் கொண்ட கும்பல் பாலமுருகனிடம் வந்து தகராறில் ஈடுபட்டுள்ளது. தகராறில் ஈடுபட்டு கொண்டிருக்கும் போதே அந்த கும்பல் தாங்கள் மறைத்து வைத்திருந்த அரிவாளால் பாலமுருகனை வெட்டியுள்ளனர். 
இதனால் பயந்து போன பாலமுருகன், அதை தடுக்க முயன்றுள்ளார். இருப்பினும் அவரை விடாமல், துரத்திச் சென்ற அந்த கும்பல் சரமாரியாக வெட்டியது. இதில் தலை மற்றும் உடலில் பல்வேறு பகுதிகளில் அவருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது.

படுகாயம் அடந்த பாலமுருகன் நடுரோட்டிலேயே ரத்த வெள்ளத்தில் சரிந்து கீழே விழுந்து இறந்துள்ளார். இந்த சம்பவத்தை பார்த்து கொண்டிருந்தவர்கள் அங்கிருந்து அலறியடித்து கொண்டு ஓடினார்கள். பின்னர் அந்த கும்பல் அங்கிருந்து மோட்டார் சைக்கிளில் தப்பி சென்றது. 

இதுகுறித்து உடனடியாக திருப்பூர் வடக்கு போலீஸ் நிலையத்திற்கு தகவல் கொடுக்கப்பட்டது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டு கிடந்த பாலமுருகனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தினார்கள். கொலையாளிகளை கண்டுபிடிக்க மோப்ப நாய் வரவழைக்கப்பட்டது.

ஆனால் மோப்ப நாய், கொலை நடைபெற்ற இடத்தில் இருந்து சிறிது தூரம் ஓடிச்சென்று நின்று விட்டது. அது யாரையும் கவ்விப்பிடிக்கவில்லை. இந்த கொலை சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும், அவருடைய உறவினர்கள், நண்பர்கள் என ஏராளமானோர் அங்கு கூடியதால் பரபரப்பு ஏற்பட்டது.