6 வயது சிறுவன் கொலை... 14 வயது சிறுமி கற்பழிப்பு...! குற்றவாளிக்கு மரண தண்டணையுடன் 92 ஆண்டு சிறை
கேரளாவில் 6 வயது சிறுவனை கொலை செய்ததுடன் அவனது 14 வயது சகோதரியை கற்பழித்த வழக்கில் குற்றவாளிக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சிறுவன் அடித்து கொலை
கேரளா மாநிலத்தில் உள்ள இடுக்கி மாவட்டம் ஆனவச்சால் அருகே அமக்கண்டம் பகுதியைச் சேர்ந்த ஷாஜகான் என்பவருக்கு தன் பக்கத்து வீட்டில் வசித்து வந்த தன் மனைவியின் சகோதரி குடும்பத்துடன் நிலப்பிரச்சனையில் முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இந்த நிலையில் கடந்த 2021 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 3 ஆம் தேதி, திடீரென அந்த வீட்டுக்குள் புகுந்த ஷாஜகான்,அங்கு ஒரு அறையில் தூங்கிக் கொண்டிருந்த 6 வயது சிறுவன் மற்றும் பாட்டியின் தலையில் சுத்தியலால் அடித்துள்ளார்.இதில் பாட்டி காயமடைந்த நிலையில் சிறுவன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தான்.
14வயது சிறுமி கற்பழிப்பு
மற்றொரு அறையில் சிறுவனின் அம்மாவும், சகோதரியும் தூங்கிக் கொண்டிருந்தார்கள். அம்மாவை சுத்தியலை கொண்டு தாக்கியதில் அவர் மயக்கமான நிலையில், 14 வயது சிறுமியை அருகிலுள்ள கொட்டகைக்கு தூக்கிச் சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.இந்த சம்பவம் கேரள மாநிலத்தையே உலுக்கியது. இந்த வழக்கில் குற்றவாளிக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என்ற கோரிக்கையும் வலுவாக எழுந்தது. இந்த வழக்கில் ஷாஜகான் கைது செய்யப்பட்ட நிலையில், வழக்கு போக்சோ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இடுக்கியின் வெள்ளத்தூவல் போலீசார் வழக்குப்பதிவு செய்து மொத்தம் 73 பேர் சாட்சிகளாக விசாரிக்கப்பட்டனர். இந்த வழக்கில் ஒன்றரை ஆண்டுக்குப் பின் குற்றப்பத்திரிக்கை சமர்பிக்கப்பட்டது.
குற்றவாளிக்கு மரண தண்டனை
இதனையடுத்து கடந்த 20 ஆம் தேதி தீர்ப்பளித்த நீதிபதி டி.ஜி.வர்கீஸ், ஷாஜகான் குற்றவாளி என உறுதி செய்யப்பட்டதாக தெரிவித்தார். இதனையடுத்து நேற்று குற்றவாளிக்கான தண்டனையை அறிவித்தார். அதன்படி சிறுவனை கொலை செய்த குற்றத்திற்காக குற்றவாளிக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. தொடர்ந்து சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தது, தாய் மற்றும் பாட்டியை தாக்கி கொலை செய்ய முயன்றது என 4 குற்றங்களுக்கும் தலா ஒரு ஆயுள் தண்டனை வீதம் மொத்தம் 92 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. ஷாஜகானுக்கு ஒவ்வொரு குற்றத்திற்கும் தனித்தனியாக அபராதமும் விதிக்கப்பட்ட நிலையில், அதனைக் கட்டத் தவறினால் மேலும் 11 ஆண்டுகள் சிறைத்தண்டனை அனுபவிக்க வேண்டும் எனவும் நீதிபதி தனது தீர்ப்பில் தெரிவித்துள்ளார்.
இதையும் படியுங்கள்
பட்டப்பகலில் துணிகரம்.. இரும்பு கம்பியால் கொடூரமாக தாக்கப்பட்ட ஊழியர் - 14 லட்சம் கொள்ளை!