பேரையூர் அருகே மதுபோதையில் ,  பெற்ற மகளை  தந்தையே  அரிவாளால் வெட்டிய சம்பவம் அதிர்ச்சியை  ஏற்படுத்தியுள்ளது. திருமணம் முடிந்து ஒருவாரம் கூட ஆகாத நிலையில் புதுமணப் பெண்  வெட்டப்பட்டுள்ளது  மதுரை பரபரப்பு ஏற்பட்டுள்ளது.  மதுரை மாவட்டம் பேரையூர் தாலுகாவிற்குட்பட்ட பெரிய பூலாம்பட்டியைச் சேர்ந்தவர் மாரியப்பன் ,  சென்னையில் உள்ள ஒரு உணவகத்தில் பணியாற்றி வரும் இவர் தனது இரண்டாவது மகள் மின்னல் கொடியை பெரியபூலாம்பட்டியைச் சேர்ந்த ராமர் என்பவருக்கு கடந்த 12 ஆம் தேதி திருமணம் முடித்து கொடுத்ததாக கூறப்படுகிறது. 

இந்நிலையில் நேற்று காலை மகள் மின்னல் கொடியின் மதிப்பெண் சான்றிதழ் ,  பேரையூரில் உள்ள பள்ளியில் உள்ளதாக கூறியும் அதனை வாங்கி வருவதாக கூறி  மாப்பிள்ளை ராமரிடம் தெரிவித்துவிட்டு , தன்  மகளை அழைத்துக் கொண்டு மாரியப்பன் பேரையூர் சென்றதாக தெரிகிறது.   மதுப்பழக்கம் கொண்ட மாரியப்பன் மகளுக்கு தெரியாமல் சென்று மது அருந்திவிட்டு வந்ததாகவும், அப்போது இருவரும் வீட்டிற்கு வந்து கொண்டிருந்த போது தந்தை மது அருந்தியதை தெரிந்துகொண்ட  மகள் மின்னல் கொடி ,  தந்தையை  கண்டித்தாக கூறப்படுகிறது. இதில் இருவருக்கும் இடையே வாய்த் தகராறு ஏற்பட்ட நிலையில் மாரியப்பன் தன் பையில் வைத்திருந்த அரிவாளால் மின்னல் கொடியை சரமாரியாக வெட்டியதாக கூறப்படுகிறது. 

படுகாயமடைந்த மின்னல் கொடியை அக்கம் பக்கத்தினர் மீட்டு மதுரை ராஜாஜி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.  இச்சம்பவமறிந்து விரைந்து வந்த பேரையூர் காவல் துணைக் கண்காணிப்பாளர் மதியழகன் இச் சம்பவம்  குறித்து வழக்கு பதிவு செய்து விசாரிக்க உத்தரவிட்டார்,  இதனையடுத்து போலீசார்  மதுபோதையில் இருந்த தந்தை மாரியப்பனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் திருமணம் முடிந்து ஒரு வாரம் கூட ஆகாத நிலையில் புதுமணப் பெண் அவரது தந்தையால் கொடுரமாக வெட்டிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.