கொரோனா வைரஸ் பாதிப்பதால் விலகி இருக்கும்படி கூறிய தமிழக கூலித் தொழிலாளியை கேரளா தொழிலாளி குத்திக் கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நீலகிரி மாவட்டம் ஊட்டி அருகே உள்ள நொண்டிமேடு பகுதியை சேர்ந்தவர் ஜோதிமணி(35). இவர் ஊட்டி மார்க்கெட்டில் கூலி தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். இவருக்கு சாந்தாமணி என்ற மனைவியும், 2 குழந்தைகளும் உள்ளனர். நேற்று வழக்கம்போல் ஜோதிமணி வேலைக்கு சென்றார். மதியம் வேலை முடிந்து டீ குடிப்பதற்காக ஊட்டி மத்திய காவல் நிலையம் அருகே உள்ள டீக்கடைக்கு சென்றார். அங்கு போண்டா மாஸ்டராக கேரள மாநிலம் பாலக்காட்டை சேர்ந்த தேவதாஸ்(43) என்பவர் வேலை பார்த்து வருகிறார்.

அங்கு அவர் வடை போடுவதற்காக வெங்காயம் நறுக்கி கொண்டிருந்தார். அப்போது அங்கு டீ குடிக்க வந்த ஜோதிமணியை அருகில் வராதே, தள்ளி நில் கொரோனா பரவுகிறது என்று கூறியுள்ளார். இதில் கோபம் அடைந்த ஜோதிமணி என்னால் கொரோனா பரவவில்லை. உனது சொந்த ஊரான கேரளாவில் தான் கொரோனா வேகமாக பரவி வருகிறது. நீ தள்ளி நில் என்றார். இதனால் அவர்களுக்கு இடையே வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது.

வாக்குவாதம் முற்றவே ஆத்திரமடைந்த தேவதாஸ் தான் வெங்காயம் நறுக்க பயன்படுத்திய கத்தியால் ஜோதிமணியின் கழுத்தில் சரமாரியாக குத்தியுள்ளார். இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்த  ஜோதிமணி சம்பவ இடத்திலேயே துடிதுடித்து  உயிரிழுந்தார்.கண் முன்னே நொடிப்பொழுதில் நண்பன் கொலை செய்யப்பட்டதால் ஊட்டி மார்க்கெட்டில் பாரம் தூக்கும் தொழிலாளர்கள் ஆவேசமடைந்து தேவதாஸைத் தாக்க முற்பட்டனர்.இது தொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் ஜோதிமணி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இதனை அடுத்து தேவதாஸை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.