கோவை கல்லூரி மாணவி பிரகதி பாலியல் வன்கொடுமை செய்து கத்தியால் 3 இடங்களில் குத்தி கொலை செய்யப்பட்டதாக பிரேத பரிசோதனை அறிக்கையில் தற்போது தெரியவந்துள்ளது.

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே உள்ள ராகவநாயக்கன்பட்டியை சேர்ந்தவர் வெள்ளைச்சாமி. பைனான்சியர். இவருடைய மகள் பிரகதி (20). இவர் கோவை ஆவாரம்பாளையம் ரோட்டில் உள்ள தனியார் மகளிர் கல்லூரியில் பி.எஸ்.சி. கணிதம் 2-ம் ஆண்டு படித்து வந்தார். கடந்த வெள்ளிக்கிழமை அன்று சொந்த ஊருக்கு செல்வதற்கு கல்லூரி விடுதியில் அனுமதி பெற்று கிளம்பியுள்ளார். 

ஆனால், அன்று இரவு ஒட்டன்சத்திரத்திற்கு மாணவி வராத நிலையில், அவரது செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்தது. இதனையடுத்து 
கோவை காந்திபுரம் காட்டூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதனைத்தொடர்ந்து மாணவி காணாமல் போனதாக காட்டூர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். 

இந்நிலையில் பொள்ளாச்சி அருகே உள்ள பூசாரிப்பட்டியில் ரோட்டோரத்தில் 20 வயது மதிக்கத்தக்க இளம்பெண் ஒருவர் அரை நிர்வாண கோலத்தில் கழுத்தறுக்கப்பட்டு கொலை செய்யப்பட்டு கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் முட்புதருக்குள் இருந்த பெண்ணின் உடலை மீட்டனர். விசாரணையில் அவர் கல்லூரியில் இருந்து காணாமல் போன மாணவி பிரகதி என்பது உறுதி செய்யப்பட்டது. கொலை வழக்காக பதிவு செய்யப்பட்டுள்ள இதனை விசாரிக்க 4 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில் சிசிடிவி காட்சிகளை வைத்து தற்போது சந்தேகத்தின் பேரில் சதீஸ் என்பரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதனிடையே கல்லூரி மாணவி பிரகதி பிரேத பரிசோதனை அறிக்கையில் பாலியல் வன்கொடுமை செய்து கத்தியால் 3 இடங்களில் குத்தி கொலை செய்யப்பட்டது தெரியவந்துள்ளது. இதனையடுத்து மாணவி உடலை பெற்றோர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.