சேலம் கோட்டக்கவுண்டம்பட்டி பகுதியை சேர்ந்த மஞ்சுளா கல்லூரி மாணவி. இவர் நேற்று முன்தினம்  இரவு சேலம் கடைவீதியில் உள்ள தோழி வீட்டுக்கு வந்தார்.பின்னர் அவர், கடை வீதியில் புத்தகங்கள் வாங்கி விட்டு தனது சகோதரியின் கணவருடன் மோட்டார் சைக்கிளில் புறப்பட்டு வீட்டிற்கு சென்றார். 

மாமாங்கம் ஐ.டி. பார்க் அருகே சென்றபோது, சிறுநீர் கழிப்பதற்காக சகோதரியின் கணவர் மோட்டார் சைக்கிளை நிறுத்தினார். அப்போது 5 பேர் கொண்ட கும்பல் வழிமறித்து அவரை அடித்து துரத்திவிட்டு, மாணவியை முட்புதருக்குள் தூக்கிச் சென்றனர். இதில் ஒருவன் மாணவியை கற்பழித்தான்.

இதையடுத்து மாணவியின் அக்காள் கணவர் காப்பாற்றுங்கள், காப்பாற்றுங்கள் என சத்தம் போடவே, அந்த கும்பல் அங்கிருந்து தப்பி ஓடி விட்டது.

அவர் சத்தம் போடவில்லையென்றால், மீதமுள்ள 4 பேரும் சேர்ந்து மாணவியை நாசம் செய்திருப்பார்கள். அதிர்ஷ்டவசமாக மாணவி அந்த கும்பலின் பிடியில் இருந்து உயிர் தப்பினார். அவரை அக்காள் கணவர், அழைத்துக் கொண்டு வீடு திரும்பினார்.

இது பற்றி சேலம் மாநகர போலீஸ் கமிஷனர் சங்கரிடம், மாணவி கண்ணீர் மல்க புகார் அளித்தார். போலீஸ் கமிஷனர் சங்கர் உடனடியாக சம்பந்தப்பட்டவர்களை கைது செய்து, உரிய நடவடிக்கை எடுக்க சூரமங்கலம் போலீசாருக்கு உத்தரவிட்டார்.

அதன்பேரில் இன்ஸ்பெக்டர் மற்றும் சப்-இன்ஸ்பெக்டர்கள் தலைமையிலான போலீசார் சம்பவம் நடந்த இடத்தை பார்வையிட்டு, மாணவியை கடத்தி பலாத்காரம் செய்த கும்பலில் யார்? யார்? இருந்தார்கள் என விசாரித்தனர்.

இதில், சம்பவம் நடந்த இடத்தின் அருகே உள்ள டால்மியா போர்டு, வெள்ளக்கல்பட்டியை சேர்ந்த ஒரு கும்பல் ஈடுபட்டு இருப்பது தெரியவந்தது.

இதையடுத்து அவர்களை பிடிக்க வெள்ளக்கல்பட்டியில் போலீசார் முகாமிட்டனர். இதில் 3 பேர் வசமாக சிக்கினார்கள். அவர்களை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தியதில், ஜெயபிரகாஷ் மற்றும் இவரது கூட்டாளிகள் பாபு, மணிகண்டன் ஆகியோர் என்பதும், இதில் வாலிபர் ஜெயபிரகாஷ் தலைமையில் மாணவியை கடத்தி இருக்கிறார்கள். பின்னர் அவர், மாணவியை பலாத்காரம் செய்துள்ளார் என்பதும் தெரியவந்தது.

இவர்களால், மேலும் மாணவிகள் யாராவது பாதிக்கப்பட்டுள்ளார்களா?, கொலை, கொள்ளை, திருட்டு, வழிபறி என பல்வேறு குற்றங்களில் ஈடுபட்டு இருக்கிறார்களா? என துருவி, துருவி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த நிலையில் தலைமறைவாக இருக்கும் மீதமுள்ள 2 பேரை குற்றப்பிரிவு போலீசார் மற்றும் தனிப்பிரிபு போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.