கோவையில் அரசு மருத்துவமனை செவிலியர் மர்மமாக உயிரிழந்த விவகாரத்தில் கணவர் மீது கொலை வழக்கு பதிவு செய்ய கால தாமதிப்பதை கண்டித்து பெண்ணின் உறவினர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

கோவை சூலூர் கலங்கல் சாலையில் உள்ள விவேகானந்தன் கார்டன் பகுதியைச் சேர்ந்த தம்பதிகள் முரளி சங்கர்(27) மற்றும் பாண்டி மீனா(24). இந்த தம்பதிகளுக்கு 3 வயதில் பெண் குழந்தை உள்ளது. இதில் பாண்டிமீனா பல்லடம் அரசு மருத்துவமனையில் தற்காலிக செவிலியராக பணியாற்றி வந்தார். இப்படியிருக்க பாண்டி மீனாவுக்கும் அவரது கணவர் மற்றும் கணவரின் பெற்றோருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. 

இந்த நிலையில் நேற்று இரவு பாண்டி மீனா மர்மமான முறையில் தூக்கில் தொங்கினார். இது தொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் உயிரிழந்த தனது மகளின் உடலில் காயங்கள் இருப்பதாகவும் ஆகவே உயிரிழப்பில் சந்தேகம் இருப்பதாக கூறினர். மேலும் மீனாவின் பெற்றோர் கணவர் வீட்டாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். 

இதையடுத்து கொலை வழக்காக பதிவு செய்ய கோரி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். ஆனால் போலீசார் கொலை வழக்காக பதிவு செய்யவில்லை என பாண்டி மீனாவின் உறவினர்கள் கோவை அரசு மருத்துவமனை முன்பு சாலை மறியலில் ஈடுபட்டனர். கொலை வழக்காக பதிவு செய்யும் வரை உடலை வாங்க மாட்டோம் என மறுப்பு தெரிவித்துள்ளனர். 

இதைத் தொடர்ந்து தற்போது போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். மேலும் வரதட்சணை கொடுமையால் தான் கொலை செய்துள்ளனர் என செவிலியரின் உறவினர்கள் கணவர் மற்றும் கணவரின் வீட்டார் மீது குற்றம்சாட்டி உள்ளனர். சுமார் அரை மணி நேரமாக நடைபெற்று வரும் சாலை மறியலால் கோவை அரசு மருத்துவமனையை சுற்றியுள்ள பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது.