திருவண்ணாமலையில் மாவட்ட நிர்வாகம் சார்பில் 2 நாட்கள் விழிப்புணர்வு நிகழ்ச்சிக்கு,  குழந்தைகள் காப்பகங்களில் இருந்து சிறுமிகள் அழைத்து வரப்பட்டிருந்தனர். அப்போது காப்பகத்தில் உள்ள குறை, நிறைகள் குறித்து  கருத்து கேட்கப்பட்டது. அதில், கிரிவலப்பாதையில் செயல்பட்ட அருணை குழந்தைகள் காப்பகத்தைச் சேர்ந்த சிறுமிகள் தங்களுக்கு காப்பக நிர்வாகி பாலியல் தொல்லை கொடுப்பதாக பகீர் தகவலை கூறியுள்ளனர்.

சிறுமிகளுக்கு செக்ஸ் டார்ச்சர் கொடுத்து வந்தது தெரிந்ததால், கலெக்டர் கந்தசாமி, மாவட்ட எஸ்பி உதவியுடன் நேரடியாக அவரே விசாரணையில் இறங்கினார்.   குழந்தைகள் பாதுகாப்பு நல குழும அலுவலர் கோகிலா மற்றும் போலீசார் இந்த காப்பகத்தில் அதிரடியாக உள்ளே நுழைந்து சோதனை  மேற்கொண்டதில், 2 கம்ப்யூட்டர்கள், ஒரு லேப்டாப் இருந்ததை கைப்பற்றினர். அதில் ஏராளமான ஆபாச வீடியோக்கள் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். 

அந்த காப்பகத்துக்கு மேலாளராக வினோத்குமார், நிர்வாகியாக நந்தகுமார்  இருந்து வந்துள்ளனர், நண்பர்களான இவர்கள். காப்பக சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை தந்திருக்கிறார்கள்.  இதுகுறித்து கண்ணீரோடு பேசிய காப்பக சிறுமிகள் : "ராத்திரிகளில் கம்ப்யூட்டரில் ஆபாச படங்களை போட்டுக்காட்டி அதை பார்க்கும்படி 2 பேரும் எங்களை கட்டாயப்படுத்துவார்கள். அந்த படத்தை பார்த்ததும், அதில் உள்ளபடி எங்களிடம் நடந்துக்கணும்னு சொல்வாங்க, நாங்க அப்படி நடந்துக்கலன்னா, எங்களுக்கு சாப்பாடு தராம பட்டினி போட்டு கொடும பண்ணுவாங்க, அதுமட்டுமல்ல  பீர் திருவிழா  நடத்தும் அவங்க எங்களை மது குடிக்க வைத்து ஆபாசமாக நடந்து கொள்வார்கள்" என்று  கூறினர். 

இதையடுத்து, திருவண்ணாமலை டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்து, வினோத்குமாரை  கைது செய்ததுடன், காப்பகத்தை பூட்டியும் சீல் வைத்தனர். மேலும், காப்பகத்தில் தங்கியிருந்த 19 சிறுமிகள் மீட்கப்பட்டு வேறு காப்பகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இப்போது தலைமறைவாக உள்ள பார்ட்னர் நந்தகுமாரை தேடி வருகிறார்கள்.