கொடுத்த கடனுக்காக 13 வயது சிறுமியை கட்டாயத் திருமணம் செய்த நபர் மற்றும் அப்பெண்ணின் தந்தை உள்ளிட்ட 5 பேரை போலீசார் கைது செய்துள்ளனர் . கரூர் மாவட்டம் கடவூர் அடுத்துள்ள எருதிகோன்பட்டியை சேர்ந்தவர் பெருமாள் .  இவரது 13 வயது மகள்,  அருகில் உள்ள பள்ளியில் பயின்று வந்தார் .  இந்நிலையில் அந்தப் பெண் குளித்தலை காவல் நிலையத்தில் புகார் ஒன்றை கொடுத்துள்ளார் அதில் ,

 

எனது தந்தை பெருமாள் குஜிலியம்பாறை அருகில் உள்ள கவுண்டனூரை சேர்ந்த உறவினர் முக்கன் (45) என்பவரிடம் கடந்த ஆண்டு 15 ஆயிரம் ரூபாய் பணத்தை கடன் வாங்கி இருந்தார் .  அந்தக் கடனை எனது தந்தை திருப்பி கொடுக்காததால் அதற்கு வட்டியும் முதலுமாக என்னை மூக்கன் மகன் சரவணகுமாருக்கு (23) திருமணம் செய்து வைக்க பெண் கேட்டனர் .  இந்நிலையில் அதற்கு ஒப்புக்கொண்ட எனது தந்தை கடந்த ஜூன் மாதம் 27ஆம் தேதி என்னை சரவணகுமாருக்கு  கட்டாயப்படுத்தி திண்டுக்கல்லில் உள்ள பெருமாள் கோவிலில் திருமணம் செய்து வைத்தனர்.  திருமணமான சில நாட்களில் தீபாவளி பண்டிகைக்காக எனது பெற்றோர் வீட்டிற்கு சரவணகுமார் உடன் வந்தேன் .

ஆனால் அவருடன் வாழ விருப்பம் இல்லாததால் அவருடன் செல்ல மறுத்தேன் ,  ஆனால் பெற்றோர்கள் பலவந்தப்படுத்தி சரவணகுமார் மற்றும் அவர்களுது குடும்பத்துடன் செல்லுமாறு வற்புறுத்தியதால் ,  காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளேன் என  தெரிவித்துள்ளார் . இப்புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திய போலீசார் ,  சிறுமியின் புகாரில் உண்மை இருப்பதை அறிந்து சிறுமியின் தந்தை பெருமாள் (45) ,  தாய் வீரமணி(40) , கணவர் சரவணகுமார்(23) அவரது தந்தை மூக்கன்( 45) மற்றும் அவரது மனைவி அஞ்சலம் ( 40) ஆகிய 5 பேரையும் போக்சோ சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.