மானாமதுரையில் அமமுக ஒன்றிய செயலாளர் சரவணன் கொலை வழக்கில் பணம் கொடுக்காததால் நண்பர்களே வெட்டிக்கொலை செய்தது போலீசார் விசாரணையில் தெரிவந்துள்ளது. இது தொடர்பாக இதுவரை 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை அருகே உள்ள ஆவாரங்காடு பகுதியைச் சேர்ந்தவர் சரவணன் (40). டி.டி.வி.தினகரனின் அ.ம.மு.க.வின் மேற்கு ஒன்றிய செயலாளராக இருந்து வருகிறார். இவர் பேரூராட்சி ஒப்பந்த பணிகளையும் செய்து வந்தார். மானாமதுரை பாண்டியன் நகரில் மனைவி மற்றும் 2 குழந்தைகளுடன் சரவணன் வசித்து வருகிறார். மானாமதுரை சட்டப்பேரவை இடைத்தேர்தலில் மாரியப்பன்கென்னடிக்கு ஆதரவாகப் பிரச்சாரம் செய்தார்.

இந்நிலையில் மே 26-ம் தேதி அதிகாலை நடை பயிற்சியின் போது வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் தனிப்படை அமைத்து விசாரித்து வந்தனர். விசாரணையில், சரவணனின் தந்தையை உள்ளாட்சித் தேர்தல் முன்விரோதத்தில் சிலர் வெட்டி கொலை செய்ய முயன்றனர். இதில் தொடர்புடைய ஒருவரை போலீசார் மதுரை சிறையில் இருந்து வெளியே கூட்டி வந்தபோது சிறைக்கு அருகிலேயே சரவணன் மற்றும் அவரது நண்பர்கள் சேர்ந்து மிளகாய் பொடியைத் தூவி கொலை செய்ய முயன்றனர்.

 

இந்த வழக்கு விசாரணை மதுரை நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கு விசாரணைக்கு சரவணன் மட்டும் காரில் சென்று வந்துள்ளார். ஆனால் அவரது நண்பர்களுக்கு எந்த செலவும் செய்யவில்லை. இதனால் அவரது நண்பர்கள் ஆத்திரத்தில் இருந்து வந்தனர். கொலை முயற்சி வழக்கில் விரைவில் தீர்ப்பு வர உள்ளது. ஆகையால் தங்களுக்கு தண்டனை கிடைக்க வாய்ப்புள்ளதால் குடும்பத்தினருக்கு கொடுக்க பணம் கேட்டுள்ளனர். ஆனால் அவர் பணம் தரவில்லை. இதனால் சரவணனை அவரது நண்பர்களே கொலை செய்தது அம்பலமானது. கொலை தொடர்பாக 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். தலைமறைவாக உள்ள 2 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.