சென்னை பள்ளிக்கரணை பகுதியில் அதிமுக முன்னாள் கவுன்சிலர் ஜெயபால் தமது மகன் திருமணத்துக்காக சாலையில் பேனர்களை வைத்திருந்தார். மேலும் அப்பகுதி முழுவதும் நெருக்கமாக அதிமுக கொடிகளையும் நட்டு வைத்திருந்தார். அடுத்தடுத்து பெரிய பெரிய பேனர்களும் வைத்திருந்தனர்.

அப்போது அந்த சாலையில் பல்லாவரத்தைச் சேர்ந்த சுபஸ்ரீ என்ற 23 வயது இளம்பெண் கனடா செல்வதற்கான தேர்வை,  பள்ளிக்கரணையில் உள்ள  காமாட்சி மருத்துவமனையில் எழுதிவிட்டு இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது ஜெயபால் வைத்த பேனர்களில் ஒன்று சரிந்து விழுந்தது. 

பேனர் சரிந்து விழுந்ததால் சுபஸ்ரீ இருசக்கர வாகனத்துடன் நிலைதடுமாறி கீழே விழுந்தர்.
அப்போது பின்னால் வந்த தண்ணீர் லாரியில் சிக்கினார் சுபஸ்ரீ. இதில் படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சுபஸ்ரீ சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இதுகுறித்து பள்ளிகரணை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் வட மாநிலத்தைச் சேர்ந்த லாரி டிரைவரையும் அவர்கள் கைது செய்துள்ளனர். அதிமுக பிரமுகரது  இல்லத் திருமண விழாவில் வைக்கப்பட்டிருந்த பேனர்களுக்கு அவர் அனுமதி பெறவில்லை என்றும் கூறப்படுகிறது.

டிராபிக் ராமசாமி போன்ற சமூக ஆர்வலர்கள் பெரும் போராட்டம் நடத்தியும், உயர்நீதி மன்றம் மிகக் கடுமையாக உத்தரவு பிறப்பித்தும் இது போன்ற சம்பவங்கள் நிகழ்வது மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.