மூன்று இளைஞர்களை ஏமாற்றி இளம் பெண் ஒருவர் திருமணம் செய்துள்ள சம்பவம் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திரா மாநிலம், பிரகாசம் மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஆஞ்சநேயலு. சாப்ட்வேர் என்ஜினீயரான இவர், டென்மார்க் நாட்டிலுள்ள ஒரு ஐடி நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இவருக்கு'திருமணம் செய்ய அவரது பெற்றோர் முடிவு செய்த நிலையில், மேட்ரிமோனி இணைய தளத்தின் வாயிலாக மணப்பெண்ணைத் தேடியுள்ளார்கள். அப்போது திருப்பதியைச் சேர்ந்த ஐபிஎஸ் அதிகாரி சொப்னா என்னும் பெண்ணின் வரன் அவர்களுக்குக் கிடைத்துள்ளது. இதையடுத்து அந்த பெண்ணை சந்தித்த ஆஞ்சநேயலு, அவரை பிடித்துப்போக, இருவரும் கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில் திருமணம் செய்து கொண்டார்கள்.

தனது மனைவி ஐபிஎஸ் அதிகாரி என்ற சந்தோஷத்தில் ஆஞ்சநேயலு தனது திருமண வாழ்க்கையைத் தொடங்கினார். ஹைதராபாத்தில் இருவரும் மகிழ்ச்சியாக வாழ்ந்த நிலையில், தனது விடுமுறை முடிந்ததால் டென்மார்க்குக்கு செல்ல ஆஞ்சநேயலு முடிவு செய்தார். அப்போது தனது ஆசை மனைவியையும் தன்னோடு வருமாறு அழைத்துள்ளார். ஆனால், சொப்னாவோ எனக்கு காவல்துறை பணி இருக்கிறது, அது தான் முதலில் முக்கியம் எனக் கூறி டென்மார்க் செல்ல மறுத்து விட்டார். ஆஞ்சநேயலு எவ்வளவோ வற்புறுத்தியும் சொப்னா டென்மார்க் செல்ல மறுத்த நிலையில், ஆஞ்சநேயலு மட்டும் தனியாக டென்மார்க் சென்றார்.

இதையடுத்து சில நாட்கள் கழித்து பிரகாசம் மாவட்டத்துக்கு வந்த சொப்னா, தன்னை உங்களது மகன் ஏமாற்றி விட்டார் எனத் தனது மாமனார், மாமியாரிடம் கூறியுள்ளார். அவர்கள் ஒன்றும் புரியாமல் குழம்பி நிற்க, சொப்னா புதிய குண்டு ஒன்றைத் தூக்கிப் போட்டார். அதாவது தனக்கு ஏற்பட்ட மன உளைச்சல், மற்றும் தான் ஏமாந்து போன காரணத்தினால் எனக்குப் பணம் கொடுக்க வேண்டும் எனக் கூறியுள்ளார். அப்போது மாமனார், மாமியார் ஆகிய இருவரும், உன்னை எங்களது மகன் ஏன் ஏமாற்ற வேண்டும், அப்படி என்ன நீ ஏமாந்தாய் எனக் கேட்டுள்ளார்கள். ஆனால் அதற்குப் பதிலளிக்காமல் தனக்குப் பணம் தரவில்லை என்றால் நடப்பதே வேறு என கூறி மிரட்டியுள்ளார்.

மருமகள் ஏதோ கோபத்தில் இருக்கிறார், எனவே அவளைப் பேசி சமாதானப்படுத்தி விடலாம் என அவர்கள் நினைத்த நிலையில் அது எல்லாம் பொய்யானது. நாளுக்கு நாள் சொப்னாவின் மிரட்டல் அதிகமாகிக் கொண்டே சென்ற நிலையில், அவரது டார்ச்சரைத் தாங்கமுடியாத ஆஞ்சநேயலுவின் பெற்றோர் டோணகொண்டா காவல் நிலையத்தில் புகார் செய்தனர். ஐபிஎஸ் அதிகாரி என்பதால் தகுந்த சட்ட நடைமுறைகளைப் பின்பற்றி அவர் மீது வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என்பதால், அவர் குறித்த விவரங்களைச் சேகரித்தார்கள். அப்போது தான் அந்த அதிர்ச்சி தகவல் வெளியானது.

அவரின் பெயரான சொப்னா என்பது போலியானது என்றும், அவர் ஐபிஎஸ் அதிகாரி இல்லை என்பதும் விசாரணையில் தெரியவந்தது. ரம்யா எனும் இயற்பெயர் கொண்ட சொப்னா இதற்கு முன்பு சித்தூர் மாவட்டத்தைச் சேர்ந்த பிரித்விராஜ் என்பவரையும் ஆத்மகூரைச் சேர்ந்த சுதாகர் என்பவரையும் வெவ்வேறு பெயர்களில் திருமணம் செய்து, பணம் பறித்து ஏமாற்றியுள்ளார். அந்தப் பெண்ணின் பண வேட்டையில் மூன்றாவதாகச் சிக்கியவர் தான் ஆஞ்சநேயலு. இந்நிலையில் அவர் தற்போது கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அந்த பெண் இப்போது மூன்று மாதம் கர்ப்பமாக இருப்பது தெரிய வந்தது.

இதனைத்தொடர்ந்து அவரிடம் நடத்திய விசாரணையில், ''ஆண்களைப் பேசிய மயக்கும் இவர், முதலிரவு நேரத்தில் கணவனிடம் நெருக்கமாகப் பேசி, தன்னை குறித்து நம்ப வைத்துள்ளார்''. இதற்கிடையே இந்த பெண்ணால் வேறு யாராவது ஏமாற்றப்பட்டுள்ளார்களா என்பது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.  இந்த சம்பவம் குறித்துப் பேசிய காவல்துறையினர், ''மேட்ரிமோனி மூலம் வரன் தேடுபவர்கள் மிகுந்த எச்சரிக்கையோடு இருக்க வேண்டும். அதிலும் படித்த இந்த இளைஞர் ஏமாந்துள்ளது மிகவும் ஆச்சரியமாக உள்ளது. ஒரு ஐபிஎஸ் அதிகாரி என்றால் அவர் குறித்த விவரங்கள் இணையத்தில் நிச்சயமாகக் கிடைக்கும். அப்படி இருந்தும் படித்த இந்த இளைஞர் ஏமாந்துள்ளது மிகவும் வேதனைக்குரிய விஷயம்'' என போலீசார் கூறியுள்ளார்கள்.