சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள தளவாய்பட்டி தெற்கு காடு மலையடிவாரம் பகுதியை சேர்ந்தவர் சாமிவேல். கூலித்தொழிலாளியான இவரது மகள். ராஜலட்சுமி தளவாய்பட்டி நடுநிலைப்பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வந்தார்.

இந்த சிறுமியை அதே ஊரைச் சேர்ந்த தினேஷ் குமார் என்ற டிரைவர் ஒரு தலையாக காதலித்து வந்துள்ளார். இவர் ஏற்கனவே திருமணம் ஆனவர். ராஜலட்சுமி  பள்ளிக்கு சென்று வரும் போதெல்லாம் அவரது பின்னால் சென்று  தினேஷ்குமார்  தொந்தரவு செய்துள்ளார். சில நாட்களுக்கு முன்பு பள்ளியில் இருந்து ராஜலட்சுமி திரும்பி வரும்போது அவரிடம் செக்ஸ் வைத்துக் கொள்ளலாம் வா என வற்புறுத்தியுள்ளார். இதனால் பயந்து போன் அந்த சிறு பெண் இது குறித்து தனது தந்தையிடம் தெரிவித்து விடுவேன் என்று கூறியுள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த தினேஷ்குமார், நேற்று இரவு 8 மணியளவில் அரிவாளுடன் நேராக ராஜலட்சுமியின்  வீட்டுக்கு சென்றார். அங்கு ராஜலட்சுமியும், அவரது தாயாரும் உட்கார்ந்து பூ கட்டிக்கொண்டு இருந்தனர். வீட்டுக்குள் நுழைந்த தினேஷ்குமார் ராஜலட்சுமியின் அம்மாவைத் கடுமையாக தாக்கினார்.

இதைத் தொடர்ந்து  மாணவி ராஜலட்சுமியை அரிவாளால் சரமாரியாக கழுத்தில் வெட்டினார். பின்னர் மாணவியின் தலையை துண்டித்து ரத்தம் சொட்ட சொட்ட கையில் எடுத்துச்சென்று ரோட்டில் வைத்துவிட்டு தப்பி ஓட முயன்றார்.

அப்போது தினேஷ்குமாரின் மனைவி சாரதா மற்றும் அவருடைய தம்பி  சசிகுமார் ஆகியோர் அவரைப் பிடித்து ஆத்தூர் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

இதற்கிடையில் இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த ஆத்தூர் துணை போலீஸ் சூப்பிரண்டு பொன்.கார்த்திக்குமார் சம்பவ இடத்துக்கு நேரில் சென்று மாணவியின் உடல், தலை கிடந்த இடத்தை பார்வையிட்டு விசாரணை நடத்தினார்.

இந்த சம்பவம் குறித்து தகவல்  அறிந்ததும் அந்த பகுதியில் ஏராளமானோர் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. மாணவியின் பெறோர் மற்றும் உறவினர்கள் ராஜலட்சுமியின்  உடலை பார்த்து கதறி அழுதது  அனைவரின் கண்களிலும் கண்ணீரை வரவழைத்தது.