கடந்த நவம்பர் 27 ஆம் தேதி  தெலுங்கானாவில் பணி பணி முடிந்து இரவு வீடு திரும்பிய பெண் டாக்டர் பிரியங்கா ரெட்டி என்பவருக்கு உதவி செய்வது போல் கடத்திச் சென்று லாரி டிரைவர்கள் 4 பேர் பலாத்காரம் செய்தனர். 

அப்பெண்ணின் வாயில் கட்டாயப்படுத்தி விஸ்கியை ஊற்றி, அவரை மயக்கமடையச் செய்து, பலாத்காரம் செய்து, பின் கழுத்தை நெறித்து கொலை செய்து , உடலை எரித்தனர். இந்த கொடூரத்தில் ஈடுபட்ட லாரி டிரைவர்கள், கிளீனர்கள் என கேசவலு, முகமது பாஷா, நவீன், சிவா ஆகியோரை போலீசார் கைது செய்து விசாரித்து வந்தனர். 

இச்சம்பவம் நாடு முழுவதும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என போராட்டம் வலுத்தது. பார்லிமென்டிலும் இந்த சம்பவம் எதிரொலித்தது. குற்றவாளிகள் 4 பேரையும் 7 நாள் போலீஸ் காவலில் எடுத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த வழக்கில் விரைவாக நீதி கிடைக்க வழிவகை செய்யும் வகையில், சிறப்பு நீதிமன்றம் அமைத்து விசாரிக்க அங்குள்ள நீதிமன்றம் உத்தரவிட்டு இருந்தது. 

 இந்த நிலையில், வழக்கு விசாரணைக்காக குற்றம் நடந்த இடமான பெங்களூரு – ஹைதராபாத் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள பிரியங்கா ரெட்டி எரித்துக் கொல்லப்பட்ட அந்த பாலத்தின் அடியில் அழைத்துச் சென்றனர்.

அந்த நான்கு பேரும் எப்படி கொலை செய்தனர் என்பது குறித்து நடித்துக் காட்டச் சொல்லி போலீசார் அவர்களிடம் தெரிவித்தனர். ஆனால் அந்த 4 பேரும் போலீசாரை தாக்கிவிட்டு தப்பி ஓட முயன்றனர். இதையடுத்து,  4 பேரையும் போலீசார் என்கவுண்டரில் சுட்டுக்கொன்றனர். 

பிரியங்கா ரெட்டி எரித்துக் கொல்லப்பட்ட அதே இடத்தில் குற்றவாளிகள் 4 பேரையும் போலீசார் என்கவுண்ட்டரில் போட்டுத் தள்ளிய சம்பவம் தெலங்கானா மாநிலத்தில் பெரும் பரபரப்பை  ஏற்படுத்தியுள்ளது.