மதுரை மாவட்டம் மேலூர் அருகே இருக்கும் கந்தல்பட்டியைச் சேர்ந்தவர் ரேவதி(பெயர் மாற்றப்பட்டுள்ளது). 16 வயது சிறுமியான இவர், அப்பகுதியில் இருக்கும் ஒரு தனியார் மில்லில் பணியாற்றி வந்துள்ளார். மில்லுக்கு சொந்தமான வேனில் தினமும் அவர் வேலைக்கு சென்று வந்திருக்கிறார். அப்போது வேன் ஓட்டுநரான ராஜாவிற்கும் சிறுமிக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

முதலில் சிறுமியிடம் சாதாரணமாக பழகிய ராஜா, நாளடைவில் நெருக்கம் காட்டியிருக்கிறார். கடந்த ஒரு வாரத்திற்கு முன்பாக வழக்கம் போல சிறுமி மில்லுக்கு வேனில் சென்றுள்ளார். பணி முடிந்து மீண்டும் வீட்டிற்கு வரும் போது, ஆள் இல்லாத இடத்தில் வைத்து சிறுமியை ராஜா பாலியல் பலாத்காரம் செய்திருக்கிறார். அதை வெளியே கூறினால் கொலை செய்து விடுவதாகவும் மிரட்டியிருக்கிறார். இதனால் பயந்து போன சிறுமி யாரிடமும் கூறாமல் இருந்துள்ளார்.

இந்தநிலையில் வீட்டில் சோர்வாக இருந்த சிறுமியிடம் குடும்பத்தினர் விசாரித்துள்ளனர். அப்போது தான் ராஜா தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததை கூறி அழுதுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த சிறுமியின் பெற்றோர் செய்வதறியாது திகைத்தனர். உடனடியாக மேலவளவு காவல்துறையில் புகார் அளித்தனர். புகாரின் அடிப்படையில் போக்சோவின் கீழ் காவலர்கள் வழக்கு பதிவு செய்தனர். வேன் ஓட்டுநர் ராஜா தற்போது தலைமறைவாக இருக்கிறார். அவரை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.