பிரபல பின்னணி பாடகர் போல  பேஸ்புக்கில் பேக் ஐடி தொடங்கி மோசடி செய்து கைதான வாலிபரிடம் கைப்பற்றிய டேப்பில் , பல இளம்பெண்களின் ஆபாச போட்டோக்கள் சிக்கியுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  

உளுந்தூர்பேட்டையை சேர்ந்தவர் மகேந்திர வர்மன்,பி.எட். படித்துள்ளார். இவர் நூதன முறையில் இளம்பெண்களிடம் மோசடி செய்து பணம் சம்பாதிக்க திட்டமிட்டார். பிரபல இந்தி பின்னணி பாடகர் அர்மான் மாலிக் பெயரில் போலி ஃ பேஸ் புக் தொடங்கினார். அர்மான் மாலிக்கின் இசை ஆல்பங்கள் மற்றும் அவரது அழகிய புகைப்படங்களையும் போலி ஃ பேஸ்புக்கில் பக்கத்தில் பதிவு செய்தார். அதன்பின்னர் இளம் பெண்களுக்கு ரெக்கவஸ்ட் கொடுத்து நண்பராக்கினார்.

இந்த ஃ பேஸ்புக் பக்கத்தைப்  பார்த்தஇளம்பெண்கள் பலர், அர்மான் மாலிக் தான் ரெக்கவஸ்ட்  கொடுப்பதாக நினைத்து, ஃ பேஸ்புக் நண்பர்களானார்கள். பின்னர் அந்த இளம் பெண்களின் செல் போன் எண்களை பெற்று வாட்ஸ்-அப் மூலம் பழக தொடங்கினார்.

சில இளம் பெண்களிடம் அவர்களது அந்தரங்க படங்களைஅனுப்புமாறும் கூறினார். இதனை நம்பிய இளம் பெண்கள் தங்கள் தொடர்பான படங்களை அனுப்பினார்கள். இந்த படங்களை ஃ பேஸ்புக் பக்கத்தில் பதிவிடப் போவதாகவும், சிலரது படங்களை மார்பிங் செய்துபதிவிடப் போவதாகவும் சொல்லி  மிரட்டி, அந்த பெண்களிடம் பணம் வசூலிக்க தொடங்கினார்.

பாதிக்கப்பட்ட கோவையை சேர்ந்த இளம் பெண் அளித்த புகாரில், போலீசார் மகேந்திர வர்மனை கைது செய்தனர். போலீசில் மகேந்திர வர்மன் அளித்துள்ள வாக்குமூலத்தில்  பல திடுக் தகவல்கள் வெளியாகியுள்ளது.

ஆசிரியர் பயிற்சி படித்து முடித்து வேலை கிடைக்காததால் வருமான மின்றி தவித்து வந்தேன். அப்போதுதான் இன்டர்நெட் மூலம் இந்தி பின்னணி பாடகர் அர்மான் மாலிக் குறித்து தெரிந்து கொண்டேன். அவரது பெயரில் ஃ பேஸ்புக் ஐடி தொடங்கி பெண்களை ஏமாற்றி பணம் பறிக்கலாம் என திட்டம்தீட்டி அதன்படி போலி அட்ரஸுடன் ஃ பேஸ்புக் தொடங்கினேன். எனக்கு ஆங்கிலம், இந்தி சரளமாக பேச வரும். முகநூலில் இணைந்த பெண்களிடம் ஆங்கிலத்திலும், இந்தியிலும் பேசி அவர்களை காதல் வலையில் விழ வைத்தேன்.

அழகான பெண்களை மட்டுமே தேர்வு செய்து அவர்களது படங்களை ஆபாச படங்களாக சித்தரித்து இணையதளத்தில் வெளியிட்டு விடுவதாக கூறி பணம் பறித்தேன். இப்போது போலீசில் சிக்கி கொண்டேன் என இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

கைதான மகேந்திரவர்மனிடம்  டேப் இருந்தது. அதனை போலீசார் கைப்பற்றினார்கள். அதில் ஏராளமான இளம் பெண்களின் ஆபாச படங்கள் மற்றும் மார்பிங் செய்யப்பட்டஆபாச படங்கள் இருந்துள்ளது. மேலும் இளம்பெண்களின் போன் எண்கள் உள்ளிட்ட விவரங்களும் இருந்தன. இவற்றை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.