கோவை பெரிய தடாகம் உள்ளிட்ட கிராமப் பகுதிகளில் புகுந்து பயிர்ச்சேதம் ஏற்படுத்தி வந்த இரண்டு யானைகளுக்கு சின்னதம்பி, விநாயகன் என்று பெயரிடப்பட்டது.

கடந்த 25ஆம் தேதியன்று  டாக்டர்கள் குழுவினர் மயக்க ஊசி செலுத்தி சின்னதம்பியைப் பிடித்து கோவை டாப்சிலிப் வனப்பகுதியில் விட்டனர். சின்னதம்பி யானையை கண்காணிப்பதற்காக அதன் கழுத்தில் ஜிபிஎஸ் கருவியும் பொருத்தப்பட்டது.

ஜனவரி 31ஆம் தேதியன்று மீண்டும் சின்னதம்பி யானை பொள்ளாச்சியை அடுத்த அங்கலக்குறிச்சி கிராமத்துக்குள் புகுந்தது. வாழிடத்தை தேடி கடந்த 3 நாட்களில் 100 கி.மீ தூரம் நடந்து வந்த சின்னதம்பி தற்போது உடுமலை ரயில் நிலையத்திற்குள் புகுந்துள்ளது.

இந்நிலையில், கோவை மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலை பாதுகாப்பு குறித்து 2வது நாளாக இன்று நடைபெற்ற சூழலியல் மாநாட்டில் வனத் துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கலந்து கொண்டார்.

அப்போது பேசிய அவர், சில நாட்களுக்கு முன்பு தடாகம் பகுதியில் பிடிக்கப்பட்ட சின்னதம்பி யானை டாப்சிலிப் வனப்பகுதியில் விடப்பட்டது. ஆனால், சின்னதம்பி யானை மீண்டும் ஊர்பகுதிக்குள் வந்து உடுமலை உள்ளிட்ட பகுதிகளில் சுற்றி வருகிறது. அதனால், இந்த யானையை கூண்டில் அடைத்து வைத்து கும்கி யானையாக மாற்றுவதை தவிர வேறு வழியில்லை அதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என தெரிவித்தார்.