தென்னிந்திய நடிகர் சங்கத்துக்கான தேர்தல் தேதி மிக விரைவில் அறிவிக்கப்பட உள்ள நிலையில் தனது பரம எதிரியான சரத்குமாரையும் அவரது துணைவியார் ராதிகாவையும் ரகசியமாகச் சந்தித்திருக்கிறார் நடிகர் சங்கப் பொதுச்செயலாளர் விஷால்.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் அமைந்துள்ள வேங்கடமங்கலத்தில் நடிகர் சங்கத்துக்குச் சொந்தமான நிலத்தை சரத்குமார் தலைவராக இருந்தபோது வேறுவிதமான ஆவணங்கள் தயாரித்து  விற்றுவிட்டதாக காஞ்சிபுரம் குற்றப்பிரிவு காவல்துறையிடம் புகார் கொடுத்திருந்தார், நடிகர் சங்கப் பொதுச் செயலாளர் விஷால். 2017-ம் ஆண்டு தொடரப்பட்ட வழக்கில் காஞ்சிபுரம் காவல் துறையினர் விரைந்து செயல்படவில்லை, கிடப்பில் போட்டுவிட்டனர் என்று சென்ற ஆண்டு உயர் நீதிமன்றத்தில் விஷால் மனுத்தாக்கல் செய்திருந்தார்.

சரத்குமார், ராதாரவி இருவர் மீதுள்ள குற்றம் குறித்து விரைந்து விசாரணை நடத்த வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டு இருக்கிறது.இருவருக்கும் தொடர்ந்து சம்மனும் அனுப்பப்பட்டு வரும் நிலையில் சரத்குமார், ராதிகாவை விஷால் திடீரென சந்தித்துப் பேசியது சினிமா வட்டாரத்தில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியிருக்கிறது. 

சென்னை கடலோரத்தில் அமைந்துள்ள நட்சத்திர ஹோட்டலில் சரத்குமார், ராதிகா, விஷால் மூவரும் மதிய உணவு வேளையில் சந்தித்து விருந்து சாப்பிட்டதாகவும் அதன்பின் நீண்ட நேரம் மனம்விட்டுப் பேசியிருப்பதாகச் சொல்கிறார்கள்.விஷால் மீது பல ஊழல் குற்றச்சாட்டுகள் இருப்பதால் அவர் தேர்தலில் போட்டியிட பலத்த எதிர்ப்பு இருக்கிறது. குறிப்பாக நடிகர் சங்கத் தேர்தலில் விஷால் நிற்பதாக இருந்தால் அவரை எதிர்த்து ராதிகா சரத் நிற்கக்கூடும் என்பதால் சாட்சியின் காலில் விழுவதை விட சண்டைக்காரன் காலில் விழும் டெக்னிக்கை விஷால் கையாள்கிறாரோ என்று தோன்றுகிறது.