விஜய் சேதுபதி – த்ரிஷா நடிப்பில் உருவான 96 திரைப்படத்தின் அதிகாலை காட்சிகள் ரத்தான விவகாரத்தில் விஷால் நடந்து கொண்ட விதம் முழுக்க முழுக்க ஈகோ தொடர்புடையது என்கின்றனர் சினிமா வட்டாரத்தில். ஜெயம் ரவியை வைத்து ரோமியோ ஜூலியட், விஷாலை வைத்து கத்திச்சண்டை ஆகிய படங்களை தயாரித்தவர் நந்தகோபால். மெட்ராஸ் என்டர்பிரைசஸ் என்ற நிறுவனத்தின் பெயரில் படம் தயாரித்து வரும் நந்தகோபால், கத்தி சண்டை படத்தை விஷாலை வைத்து தயாரித்து வெளியிட்டிருந்தார். 

ஆனால் படம் வெளியாகும் சமயத்தில் ஏற்பட்ட சில பிரச்சனைகளால் தனது சம்பளத்தில் சில கோடிகளை விஷால் விட்டுக் கொடுத்ததாக சொல்லப்படுகிறது. மேலும் கத்திச்சண்டை படம் ரிலீஸ் ஆக தேவைப்படும் பணத்திற்கும் விஷால் உத்தரவாதம் அளித்ததாக கூறப்படுகிறது. கத்திச்சண்டை வெளியாகி எதிர்பார்த்த வெற்றிபெறவில்லை. இதனால் தயாரிப்பாளர் நந்தகோபாலால் விஷாலுக்கு பேசிய சம்பளத்தை கொடுக்க முடியவில்லை. மேலும் விஷால் உத்தரவாதம் கொடுத்த பணத்தையும் திருப்பி கொடுக்க முடியவில்லை. இந்த நிலையில் விஜய் சேதுபதி, த்ரிஷாவை வைத்து நந்தகோபால் குறைந்த பட்ஜெட்டில் 96 என்கிற பெயரில் படத்தை தயாரித்துள்ளார். 

இந்த படம் அக்டோபர் 4 வெளியாகும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில் தனது பழைய பாக்கியை ஷெட்டில் செய்யுமாறு விஷால் தயாரிப்பாளர் நந்தகோபாவலை அணுகியுள்ளார். ஆனால் படம் வெளியானால் தான் ஷெட்டில் செய்ய முடியும் என்று நந்தகோபால் கூறியுள்ளார். அதே சமயம் படத்தின் ஹீரோ விஜய் சேதுபதிக்கு ஒரு பெரிய தொகையை சம்பளமாக நந்தகோபால் கொடுத்தது விஷாலுக்கு தெரியவந்துள்ளது. 

அதுவும் கத்திச் சண்டை படத்திற்கு தனக்கு பேசியதை விட ஒரு மடங்கு அதிக சம்பளம் விஜய் சேதுபதிக்கு நந்தகோபாலால் கொடுக்கப்பட்டதை அறிந்து விஷால் எரிச்சல் அடைந்ததாக சொல்லப்படுகிறது. தனக்கு சம்பள பாக்கியை வைத்ததுடன், தான் உத்தரவாதம் அளித்த பணத்திற்கும் பதில் சொல்லாமல் விஜய் சேதுபதிக்கு கோடிகளை நந்தகோபால் கொட்டியது தான் விஷாலின் ஈகோவை தூண்டியுள்ளது. ஆனால் விஷால் தயாரிப்பாளர் சங்க தலைவராக இருப்பதால் ஒரு படத்தை நிறுத்தும் அளவிற்கு செல்லமாட்டார் என்று தயாரிப்பாளர் நந்தகோபால் கருதியுள்ளார். 

ஆனால் விஷாலோ கடந்த 3ந் தேதியே படத்தை பிரதி எடுத்து வைத்துள்ள ஜெமினி கலர்லேப்பிற்கு கடிதம் ஒன்றை கொடுத்துள்ளார். அந்த கடிதத்தில் தயாரிப்பாளர் நந்தகோபால் தனகுக்கு ஷெட்டில் செய்ய வேண்டி உள்ளதால் அதுவரை படத்தை வெளியிடக்கூடாது என்று விஷால் கூறியுள்ளார்.  இந்த தகவல் அறிந்து படம் வெளியாவதற்கு முதல் நாளான புதன்கிழமை இரவே ஜெமினி கலர் லேப்பிற்கு விஜய் சேதுபதி, இயக்குனர் பிரேம், தயாரிப்பாளர் நந்தகோபால் ஆகியோர் பேச்சுவார்த்தைக்கு வந்தனர். ஆனால் விஷாலோ செல்போனை ஆஃப் செய்துவிட்டு படுத்துவிட்டார்.

 

மறுநாள் காலைக்காட்சிகள் ரத்தான தகவல் அறிந்த பிறகே விஷால் இறங்கி வந்து படத்தை வெளியிட ஒப்புக் கொண்டார்.  மேலும் தனக்கு வர வேண்டிய பாக்கித் தொகையில் கணிசமான பணத்தையும் விஷால் பெற்றுக்கொண்டதாக சொல்லப்படுகிறது. இருந்தாலும் இந்த விவகாரத்தில் தனக்கு பணத்திற்கு பணமும் ஆகிவிட்டது, விஜய் சேதுபதிக்கு தான் யார் என்பதை காட்டியும் ஆகிவிட்டது என்பதே விஷாலின் ஆத்ம திருப்தியாக கூறப்படுகிறது.