கேரளாவில் கடந்த 8ஆம் தேதியிலிருந்து பெய்து வரும் கடும் மழை காரணமாக, அங்கு அசாதாரண சூழல் நிலவி வருகிறது. பெரும்பாலான மாவட்டங்களில் மழை கொட்டி தீர்த்தததால் அங்குள்ள அனைத்து அணைகளும் நிரம்பி வழிகிறது. பெருமழையால் கேரளாவில் உள்ள 10திற்கும் மேற்பட்ட  மாவட்டங்கள் கடுமையான வெள்ளத்தால் பாதிக்கப்பட்டது. 

மேலும் நிலசரிவு ஏற்பட்டதால், பல வீடுகள் மண்ணில் புதைந்தது. இதில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 357 என அம்மாநில முதலமைச்சர் தெரிவித்தார். இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்படுகிறது.

223139 மக்கள் 1500க்கும் மேற்பட்ட முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். 5.91 கோடி ரூபாய் அளவுக்கு வீடுகள், தோட்டங்கள், சுமார் 1,513 ஹெக்டர் அளவிலான விளை நிலங்கள் சேதம் அடைந்துள்ளன.  ஆடு மாடுகள் என கால்நடைகள் அதிகமாக உயிரிழந்துள்ளது. ஏராளமான மக்கள் தங்களது வீடுகள், உடைமைகளை இழந்து தவித்து வருகின்றனர்.

மேலும் கேரள மக்களுக்கு உதவும் நோக்கத்தில், உடை, உணவு, மருத்துகள் போன்றவற்றை உலகில் உள்ள அனைத்து மக்களும் கொடுத்து வருகின்றனர். அதே போல் கோலிவுட் திரையுலகை சேர்ந்த பலரும் முதலமைச்சரின் நிவாரண நிதிக்கு தங்களால் முடித்த பணத்தை கொடுத்து வருகிறார்கள்.

ஆனால் நடிகர் ராஜூவ் பிள்ளை என்பவர் தன்னுடைய திருமணம் ஏற்பாடுகளை நிறுத்திவிட்டு, நேரடியாக கேரள மக்களுக்கு உதவும் நோக்கத்தில் களத்தில் இறங்கியுள்ளார். இவர் மலையாளத்தில் சில படங்களில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் தமிழில் நடிகர் விஜய் நடித்த 'தலைவா' மற்றும் விஷால் நடித்த 'ஆம்பள' படத்திலும் நடித்துள்ளார்.

இவருக்கு கடந்த மூன்று மாதங்களுக்கு முன் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது. திருமணதிற்கு இன்னும் ஓரிரு நாட்களே உள்ள நிலையில், திருமண ஏற்பாடுகளை கவனிக்காமல் மக்களை மீட்பது தான் முக்கியம் என நேரடியாக களத்தில் இறங்கி மக்களுக்கு உதவிகள் செய்து வருகிறார். 

ஏற்கனவே தன்னுடைய திருமணத்தை, மிகவும் எளிமையாக நடத்த ,முடிவு செய்த இவர்... தற்போது திருமணத்தை குறித்த தேதியில் எந்த ஆடம்பரமும் இன்றி 10 பேர் மத்தியில் மட்டுமே நடத்த முடிவு செய்துள்ளாராம். இவரின் இந்த செயலுக்கு ரசிகர்கள் மத்தியில் வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.