கொரோனாவின் பிடியில் சிக்கி ஒட்டுமொத்த சினிமாத்துறையும் சின்னாபின்னமாகி வருகிறது. ஊரடங்கு முடிந்தாலும், தேங்கி கிடக்கும் படங்களை போட்டி, போட்டுக்கொண்டு இறக்கினால் நஷ்டம் உறுதி என்ற பீதியில் தயாரிப்பாளர்களும், விநியோகஸ்தர்களும் உள்ளனர். ஒருபுறமே 21 நாட்கள் பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கால் சினிமா மட்டுமே நம்பி வாழ்ந்த 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஒரு வேலை உணவுக்கு கூட கஷ்டப்பட்டு வருகின்றனர். 

நம்மையே நம்பி வாழும் சினிமா தொழிலாளர்களுக்கு ஒரு வேலை அரிசி கஞ்சி கொடுக்கவாவது உதவுக்கரம் நீட்டுங்கள் என்று பெப்சி சங்க தலைவர் ஆர்.கே.செல்வமணி உருக்கமான கோரிக்கையை முன்வைத்தார். இதையடுத்து சூர்யா, விஜய் சேதுபதி, சிவகார்த்திகேயன், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், ஜெயம் ரவி, லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா, தயாரிப்பாளர் தாணு, பிரகாஷ் ராஜ் உள்ளிட்டோர் நிதி தங்களால் இயன்ற உதவிகளை வழங்கினார்.

கொரோனா குறித்து நீண்ட நாட்களாக வாய் திறக்காமல் இருந்த தல அஜித் கூட இன்று மத்திய அரசு நிவாரண நிதிக்கு 50 லட்சம், மாநில அரசு நிவாரண நிதிக்கு 50 லட்சம், பெப்சி தொழிலாளர்களின் வாழ்வாதாரம் காக்க 25 லட்சம் என ஒரே நாளில் ரூ.1.25 கோடி நிதி அளித்து சோசியல் மீடியா ட்ரெண்டிங் ஆகிவிட்டார். 

ஆனால் தளபதி விஜய்யோ இதுவரை ஒரு ரூபாய் கூட கொடுக்க மனசில்லாமல் இருப்பது விமர்சனங்களை கிளப்பியுள்ளது. இந்த சமயத்தில் எங்க தளபதி கொடுக்கலைன்னா என்ன நாங்க இருக்கோம் என்ற ரீதியில் அவரது ரசிகர்கள் தீயாய் சேவை செய்து வருகின்றனர்.  மக்களுக்கு காய்கறி, அரிசி மூட்டை வழங்குவது, நமக்காக சேவையாற்றும் காவலர்களுக்கு உணவளிப்பது, தூய்மை பணியாளர்களுக்கு கையுறை, மாஸ்க் உடன் சேர்ந்து ஒரு மாத மளிகை பொருட்களையும் வழங்குவது என தங்களால் ஆன உதவிகளை செய்து வருகின்றனர். 

தற்போது கூட கிருஷ்ணகிரி மாவட்ட விஜய் ரசிகர்கள் மன்றம் சார்பில், கொரோனா நிவாரண நிதியாக 49 ஆயிரம் ரூபாயை அம்மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வழங்கியுள்ளனர். சமூக பிரச்சனைகளுக்கு குரல் கொடுங்கள் என்று ரசிகர்களுக்கு கட்டளை போட்ட விஜய் அவர்களும் கொஞ்சம் களத்தில் இறங்கினால் இன்னும் நன்றாக இருக்கும்.