கடந்த சில மாதங்களுக்கு முன், நடிகை நயன்தாரா நடித்த 'கொலையுதிர்க்காலம்' படத்தின்  புரமோஷன் நிகழ்ச்சி நடந்தது.  

இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட பழம்பெரும் நடிகர் ராதாரவி, நயன்தாரா குறித்து சர்ச்சைக்குரிய விதத்தில் பேசினார். நயன்தாராவின் காதலர் விக்னேஷ் சிவன் 'கொலையுதிர்க்காலம்'  பட தயாரிப்பாளருக்கும், ராதாரவிக்கும் தன்னுடைய கண்டனத்தை தெரிவித்தார்.

மேலும் பிரபல அரசியல் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில்  இருந்து ராதாரவி தற்காலிகமாக நீக்கப்பட்டார்.

இந்த நிலையில் வரும் 14ஆம் தேதி 'கொலையுதிர்க்காலம்' திரைப்படம் வெளியாகவுள்ளது. இந்த படத்திற்கு வாழ்த்து தெரிவிக்கும் வகையில், விக்னேஷ் சிவன் தனது சமூக வலைத்தளத்தில் கூறியுள்ளதாவது...  'கொலையுதிர்க்காலம்' படத்தை தான் பார்த்தபோது அதுவொரு சிறந்த த்ரில்லர் படம் என்பதை உணர்ந்ததாகவும், இந்த படம் நிச்சயம் ரசிகர்களை கவரும் என்றும் இந்த படம் வெற்றியடைய தனது வாழ்த்துக்கள் என்றும் கூறியுள்ளார்.

மேலும் நயன்தாரா உள்ளிட்ட அனைவரும் அருமையாக  நடித்துள்ளனர். சக்ரி டோலட்டியின் இயக்கம் மற்றும் டெக்னிக்கல் குழுவினர்களின் உழைப்பில் இதுவொரு மிக சிறந்த படமாக உருவாகியிருப்பதாகவும் தெரிவித்துள்ளார். 

தயாரிப்பாளர் மதியழகன் ஒரு தரமான படைப்பை உருவாக்கியிருப்பதாக கூறிய விக்னேஷ் சிவன், அதே நேரத்தில் சில தேவையில்லாத, துரதிஷ்டவசமான சம்பவங்கள் தன்னால் நடந்துவிட்டதாகவும், ஆனால் அதன்பின் மதியழகன் அவர்களை நேரில் சந்தித்த பின்னர் அனைத்தும் முடிவிற்கு வந்து விட்டதாக கூறியுள்ளார். நாம் அனைவரும் ஒரே துறையில் இருப்பதால் ஒற்றுமையுடன் ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டால் எந்த பிரச்சனையும் இல்லை என்றும், இந்த படம் பாக்ஸ் ஆபீஸில் சூப்பர் ஹிட்டாக தயாரிப்பாளருக்கு தன்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்து கொள்வதாக குறிப்பிட்டுள்ளார்.