பாலா இயக்கிய ‘வர்மா’ படம் தூக்கிக் கடாசப்பட்டு அது ‘ஆதித்ய வர்மா’வாக மறு அவதாரம் எடுத்து வரும் நிலையில் ஒரு சிக்கலான சமாச்சாரம் தொடர்பாக நடிகர் விக்ரமுக்கும் அதன் தயாரிப்பாளர் முகேஷ் ஆர். மேத்தாவுக்கும் அவர் வக்கீல் நோட்டீஸ் அனுப்பியிருப்பதாக நம்பமுடியாத வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.

கடந்த பிப்ரவரி மாதம் முதல் பிரதி தயாராக இருந்த நிலையில் வலுவான காரணம் எதையும் சொல்லாமல் தயாரிப்பாளர் முகேஷ் பாலாவின் படத்தை கைவிடுவதாக அறிவித்து கிரிஷய்யா என்பவரது இயக்கத்தில் ‘ஆதித்ய வர்மா’வை துவக்கினார். அதன் படப்பிடிப்பு விபரங்கள் அவ்வளவாக அறிவிக்கப்படாத நிலையில் தற்போது திடீரென்று படம் முழுமையாக முடிந்துவிட்டதாக அறிவித்துள்ளனர்.

அந்த திடீர் அறிவிப்பால் அதிர்ந்துபோன முன்னாள் இயக்குநர் பாலா சில முக்கியமான காட்சிகளை மட்டும் ரீ ஷூட் செய்துவிட்டு தான் எடுத்த பகுதிகளையும் பயன்படுத்தப்போகிறார்களோ என்ற சந்தேகத்துக்கு ஆளாகியிருப்பதாகவும் அப்படி மீறிப் பயன்படுத்தினால் சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்க தனது வழக்கறிஞர்களுடன் ஆலோசித்துவருவதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில் தனது சந்தேகத்துக்கு விளக்கம் அளிக்கவேண்டி நடிகர் விக்ரமுக்கும் தயாரிப்பாளர் முகேஷுக்கும் பாலா கடிதம் அனுப்பியிருக்கக்கூடும் என்ற யூகங்கள் கோடம்பாக்கத்தில் ஹாட்டாக நடமாடுகின்றன.