படவாய்ப்புக்காக படுக்கையை பகிர்ந்து கொண்டதாக, திரைப்படத்துறையினர் மீது புகார்களை அடுக்கி வந்த நடிகை ஸ்ரீரெட்டி மீது விபச்சார தடுப்புப் பிரிவின் கீழ் நடவடிக்கை எடுக்கக் கோரி காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. தெலுங்கு திரைப்பட உலகில் மட்டுமின்றி, இந்திய திரையுலகிற்கே இன்றைய ஹாட் டாபிக் நடிகை ஸ்ரீரெட்டிதான். நடிக்க வாய்ப்புத் தருவதாகக் கூறி, தன்னுடன் உல்லாசமாக இருந்த தெலுங்கு திரைப்பட இயக்குநர்கள் மற்றும் நடிகர்கள் பின்னர் ஏமாற்றிவிட்டதாக கூறிய நடிகை ஸ்ரீரெட்டி, அவர்களது பெயர் பட்டியலையும் வெளியிட்டு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்தார்.

தெலுங்கு திரைப்பட உலகில் கடும் எதிர்ப்பை சம்பாதித்த பின்னர், அப்படியே தமிழ்த்திரையுலகின் மீது கடைக்கண் பார்வையை திருப்பிய நடிகை ஸ்ரீரெட்டி, இங்கும் இயக்குநர்கள் ஏ.ஆர்.முருகதாஸ், சுந்தர் சி மற்றும் நடிகர்கள் ஸ்ரீகாந்த், ராகவா லாரன்ஸ் உள்ளிட்டோர் மீதும் குற்றச்சாட்டு குண்டுகளை தூக்கிப் போட்டார். மேலும், திரைப்பட உலகினர் நடிகைகளை எவ்வாறு படுக்கைக்கு அழைக்கின்றனர் என்றும், நடிகைகளை அவர்கள் எங்கெல்லாம் அனுபவிக்கிறார்கள் என்றும் கூறி அதிர்ச்சியை ஏற்படுத்தினார். 

இதனிடையே சென்னை வந்த அவர், இங்கும் சில தொலைக்காட்சிகளுக்கு பேட்டி கொடுத்து, புதுப்புது குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். இவ்வாறு தொடர்ந்து புகார் கூறிவந்த நடிகை ஸ்ரீரெட்டி மீதே தற்போது ஒரு புகார் கொடுக்கப்பட்டுள்ளது. சிவா மனசுல புஷ்பா என்ற படத்தை தயாரித்து, இயக்கி, நடித்த வாராகி என்பவர்தான் நடிகை ஸ்ரீரெட்டி மீது புகார் அளித்துள்ளார். சென்னை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் அவர் அளித்துள்ள புகார் மனுவில் கீழ்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. ‘’நடிகை ஸ்ரீரெட்டி, தமிழ்த்திரையுலக பிரபலங்கள் மீது பொய்யான குற்றச்சாட்டுகளைக் கூறி, பணம் பறிக்கும் நோக்கில் செயல்பட்டு வருகிறார். 

கடந்த ஒருவாரமாக சென்னையில் தினசரி நாளிதழ்கள் மற்றும் வார இதழ் மற்றும் ஊடகம் மூலமாகவும், செய்தியாளர்களுக்கு நடிகை ஸ்ரீரெட்டி, தனக்கு சினிமா வாய்ப்பு வழங்குவதாகக் கூறி பலர் பாலியல் பலாத்காரம் செய்துவிட்டதாகவும், அதில் இயக்குநர்கள் ஏ.ஆர்.முருகதாஸ், சுந்தர் சி., நடிகர்கள் ராகவா லாரன்ஸ், ஸ்ரீகாந்த் ஆகியோர் மீது புகார் அளித்து முதல் பட்டியலை வெளியிட்டுள்ளார்.

மேலும் இந்த பட்டியலில் பலர் உள்ளனர் என்றும், அவர்களது பெயர்களை பின்னர் வெளியிடுவதாகவும் மிரட்டும் தொனியில் பேட்டியளித்துள்ளார். இதற்கு ஆதாரம் உள்ளதா என செய்தியாளர்கள் கேட்டதற்கு 3, 4 ஆண்டுகளுக்கு முன்பு நடந்ததாகவும் கூறியுள்ளார். எனவே, திரைப்படத்துறையினரை மிரட்டி பணம் பறிக்கும் தொழிலை முழுநேரமாக நடிகை ஸ்ரீரெட்டி கொண்டுள்ளார். இந்திய கலாச்சாரத்திற்கும், பெண்கள் சமுதாயத்திற்கும் இழிவையும் களங்கத்தையும் ஏற்படுத்தும் வகையில் செயல்படுகிறார். எனவே நடிகை ஸ்ரீரெட்டி மீது விபச்சார தடுப்புப் பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று வாராகி தனது புகார் மனுவில் கோரியுள்ளார்.