தமிழ் சினிமாவில் நடிகர், இயக்குனர், எழுத்தாளர், இசையமைப்பாளர், பாடகர், என பல்வேறு திறமைகளும் கொண்டு விளங்கும் ஒரு சில கலைஞர்களில் ஒருவர் டி.ராஜேந்தர். இவரின் அடுக்குத்தொடர் வசனங்களுக்கும், தனித்துவமான நடிப்பிற்கும் பல ரசிகர்கள் உள்ளனர்.

குறிப்பாக பல பிரபலங்கள் கூட... நான் டி.ஆரின் ரசிகன் என பெருமையாக மேடைகளில் கூறியுள்ளனர்.  இவர் கடைசியாக கடந்த 2007ம் ஆண்டு ஹீரோவாக நடித்து, இயக்கிய திரைப்படம் 'வீராசாமி'.

இந்த படத்தில் ஷீலா மற்றும் மும்தாஜ் ஆகியோர் ஹீரோயின்களாக நடித்திருந்தனர். இப்படம் வெளியாகி 13 ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில், எந்த திரைப்படத்தையும் இயக்காமல் இருந்தார். ஒரு சில படங்களில் குணச்சித்திர வேடத்தில் மட்டுமே நடித்தார்.

இந்நிலையில் டி ராஜேந்தர் தற்போது மீண்டும், ஒரு அழகிய காதல் கதையை படமாக்கி, அதில் அவரே கதாநாயகனாக நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.  இந்தப்படத்தில் நடிகை நமீதா சூப்பர் மாடல் மாடலாகவும், டி.ராஜேந்தர் இசை கலைஞனாகவும் நடிக்க உள்ளனர்.

இவர்கள் இடையே உருவாகும் காதலை மையப்படுத்தி இப்படம் எடுக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் இந்தப்படத்தின் மற்ற தகவல்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படத்தை சிம்பு சினி ஆர்ட்ஸ் நிறுவனம் சார்பாக டி.ராஜேந்தர் தயாரிக்க உள்ளார்.

13 வருடம் கழித்து, டி.ராஜேந்தர் ஹீரோவாக நடித்து உருவாக உள்ளதால், இந்த படம் குறித்த தகவலுக்கு வெறித்தனமாக வெயிட் செய்து வருகிறார்கள், அவருடைய ரசிகர்கள்.