நடிகை டாப்சி நடிப்பில், வரும் வெள்ளி கிழமை (ஜூன் 14 ஆம் தேதி) வெளியாக உள்ள திரைப்படம் 'கேம் ஓவர்'.  தமிழ், இந்தி, தெலுங்கு, என  மூன்று மொழிகளில் வெளியாகவுள்ளது. 

இந்த படத்தில் இதுவரை நடித்திராத மிகவும் வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் டாப்சி.  திகில் கதையாக உருவாகியுள்ள இப்படத்தில், கால் முடியாதவராக வீல் சேரில் அமர்ந்தபடி தன்னுடைய நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார்.

மேலும் இந்த திரைப்படம் தன்னுடைய திரையுலக வாழ்க்கையில் மிக முக்கியமான படமாக இருக்கும் என நம்பும் டாப்சி,  இந்த படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு செய்தியாளர்களை சந்தித்து வருகிறார்.

அந்த வகையில் செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்ட இவரிடம் திருமணம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.  இதற்கு பதில் அளித்த டாப்சி, சினிமாவில் தன்னை நிரூபிக்க இதுவே சரியான தருணம். தற்போது அதற்கு ஏற்றாற்போல் படங்கள் கிடைத்து வருகின்றன. இதனால் திருமணம் குறித்து யோசிக்க கூட நேரம் இல்லாமல் நடித்து  வருவதாகவும், அதற்காக நான் திருமணம் செய்து கொள்ளாமலேயே இருப்பேன் என்று அர்த்தம் இல்லை.  நேரம் வரும்போது கண்டிப்பாக தன்னுடைய திருமண செய்தியை தெரிவிப்பேன் என டாப்சி தெரிவித்துள்ளார்.