தமிழ் சினிமா ரசிகர்கள் இன்னும் கொஞ்ச நாளைக்கு தங்கள் செல்போனில் ரிங் டோனாக ‘இரும்பு மனம் வேண்டும். இறைவனிடன் கேட்டேன்’ பாடலை வைத்துக்கொண்டு மனதைத் திடமாக்கிக் கொள்வது நல்லது. 

ஏனெனில் விஜய்.டி.வி. சூப்பர் சிங்கரில் பாடகராக ரசித்த ‘சின்னமச்சான் செவத்த மச்சான்’ செந்தில் வெள்ளித்திரையில் கதாநாயகனாக களம் இறங்குகிறார். இவரும் ஒரு விஜய் டிவி. புராடக்ட் என்பதால் ‘அதே இடத்திலிருந்து வந்த சிவகார்த்திகேயனை செதச்சிடுவாரோ?’ என்கிற ஹைவோல்டேஜ் கமெண்ட்களுடன் செந்தில் கணேஷ் களமிறங்குவது ‘கரிமுகன்’ என்ற படத்தின் மூலம். 

’சின்ன மச்சான்’ பாடலை எழுதிய செல்ல தங்கையா பாடல் எழுதி, இம்சையமைத்து, எழுதி இயக்கும் இப்படத்தில், முகம் தெரியாத இரண்டு பேர்களால் முகம் தெரிந்த ரெண்டு பேருக்கு ஏற்படும் பிரச்சினையை நாலுபேர் மெச்சும்படியாக இயக்கியிருக்கிறாராம். ‘ஆக்சுவலாக ஏற்கனவே இதே செந்திலை ‘திருடு போகாத மனசு’ என்ற படத்தை இயக்கியிருக்கிறேன். அடுத்து இயக்கும் 2 வது படம்தான் இந்த ‘கரிமுகன்’ 

இவர் விஜய் டி.வி. சூப்பர் சிங்கரில் பிரபலமாவதற்கு முன்பே துவங்கிய படம் இது. முதல் படத்தில் செந்தில் என்ற படத்திலும், இரண்டாவது படத்தில் கணேஷ் என்ற கேரக்டரிலும் நடிக்கவைத்திருப்பதாகச் சொல்லும் செல்ல தங்கையா, முன்றாவது படத்தில் செந்தில் கணேஷ் என்ற கேரக்டரில் நடிப்பார் என்று வைத்துக்கொண்டாலும் நாலாவது படத்தில் செந்தில் கணேஷுக்கு என்ன பெயர் வைப்பார்? பாவம் யோசித்தாலே தலைசுற்றுகிறது.