பல்வேறு கெட் அப்களில் நடிகர் விக்ரம் நடிக்கவிருக்கும் அவரது 58 வது படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி, தொடர் தோல்விகளால் துவண்டுபோயிருக்கும் அவரது ரசிகர்களைப் பரவசத்தில் ஆழ்த்தியுள்ளது.

`டிமாண்டி காலனி', `இமைக்கா நொடிகள்' ஆகிய வித்தியாசமான படங்களை தொடர்ந்து அஜய் ஞானமுத்து இயக்கும் அடுத்த படத்தில் விக்ரம் நாயகனாக நடிக்க இருப்பதாக முன்னதாக யூகமான செய்திகள் வந்துகொண்டிருந்த நிலையில் இந்த படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு தற்போது வெளியாகி இருக்கிறது.

விக்ரமின் 58-வது படமாக உருவாகும் இந்த படத்தின் முதல்கட்ட பணிகள் தொடங்கி விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், படப்பிடிப்பு வருகிற ஆகஸ்ட் மாதம் துவங்க இருக்கிறது. படத்தை 2020 கோடை விடுமுறையில் திரைக்கு கொண்டு வர திட்டமிடப்பட்டுள்ளனர்.7 ஸ்கிரீன் ஸ்டுடியோ சார்பில் லலித்குமார் மற்றும் வயாகாம் 18 ஸ்டூடியோஸ் இணைந்து தயாரிக்கும் இந்த படம், ஆக்‌ஷன் கலந்த த்ரில்லர் பாணியில் உருவாகிறது. தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளில் படம் உருவாகும் இந்த படத்தில் நடிக்கவிருக்கும் மற்றும் பணியாற்றவிருக்கும் நடிகர்கள், கலைஞர்கள் பற்றிய விவரம் விரைவில் வெளியாக இருக்கிறது.

விக்ரம் தற்போது `மஹாவீர் கர்ணா' படத்தில் நடித்து வருகிறார். மணிரத்னம் இயக்கத்தில் பொன்னியின் செல்வன் படத்திலும் நடிக்க இருக்கிறார். விக்ரம் நடிப்பில் அடுத்ததாக `கடாரம் கொண்டான்' படம் விரைவில் திரைக்கு வர இருக்கிறது. இதுதவிர கவுதம் மேனன் இயக்கத்தில் `துருவ நட்சத்திரம்' படத்திலும் நடித்துள்ளார்.

கடந்தாண்டு விக்ரம் நடிப்பில் ஸ்கெட்ச் மற்றும் சாமி ஸ்கொயர் ஆகிய படங்கள் வெளியானது. எனினும், ரசிகர்களிடையே போதுமான வரவேற்பு பெறவில்லை. கவுதம் மேனன் இயக்கத்தில் அவர் நடித்திருக்கும் ‘துருவ நட்சத்திரம்’ நீண்ட நாட்களாகக் கிடப்பில் உள்ளதால் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்கள் பட்டியலிலிருந்து சில வருடங்களாகவே விக்ரம் ஓரம் கட்டப்பட்டுள்ளார்.