’இன்று தமிழ்த்திரையுலகில் ஒரு படம் தயாரிப்பதைக்காட்டிலும் அதை ரிலீஸ் பண்ணுவதற்குள் போதும் போதும் என்று ஆகிவிடுகிறது. அதிலும் சில தயாரிப்பாளர் சங்க உறுப்பினர்கள் படத்தை ரிலீஸ் பண்ண உதவுகிறேன் என்று பொய்சொல்லி பணம் வாங்கிக்கொண்டு சீட்டிங் செய்கிறார்கள்’ என்று உறுமித்தள்ளுகிறார் ‘ஒளடதம்’ படத்தின் தயாரிப்பாளரும் நடிகருமான நேதாஜி பிரபு. 

ரெட் சில்லி ப்ளாக் பெப்பர் சினிமாஸ் நிறுவனம் சார்பில் நேதாஜி பிரபு தயாரித்து நாயகனாக நடித்துள்ள படம் ’ஒளடதம்’. இப்படத்தை ரமணி இயக்கியுள்ளார். மருத்துவத்துறையில் நடைபெறும் மோசடிகளை மையமாக வைத்து இப்படம் உருவாகியுள்ளது. இப்படம் குறித்து பத்திரையாளர்களிடம் உரையாடிய நேதாஜி பிரபு.’’இப்போது புதிதாகப் படமெடுக்க வருபவர்கள் படத்தைக் கூட போராடி எடுத்து விடுகிறார்கள். ஆனால் வெளியிடுவது அவ்வளவு சிரமமாக இருக்கிறது. எங்களை ஏமாற்ற இங்கே ஒரு கூட்டம் அலைகிறது. 

தயாரிப்பாளர் கில்டிலோ, பிலிம் சேம்பரிலோ, தயாரிப்பாளர் சங்கத்திலோ ஒரு தயாரிப்பாளர் என்று உறுப்பினர்களாக இருக்கிறார்கள். அதைக்காட்டி உங்கள் படம் வெளியிட நான் உதவுகிறேன் என்று வருகிறார்கள். ஒரு ஒப்பந்தம் போட்டுக் கொண்டு நம்மிடம் காசு பிடுங்குகிறார்கள் அவர்களால் ஒன்றுமே செய்ய முடியாது. ஆனால் பணத்தைக் கறந்து விடுகிறார்கள். அவர்களிடம் நான் ஏமாற்றப்பட்டதற்கு ஆதாரங்கள் என்னிடம் உள்ளன. 

இப்படிப்பட்ட விஷமிகளை சங்கத்திலிருந்து நீக்க வேண்டும். என்னைப் போன்ற புதிய தயாரிப்பாளர்கள் இப்படிப்பட்ட போலிகளிடம் சிக்கிக் கொண்டு தவிக்கிறார்கள். இந்த விஷமிகளை சினிமாவிலிருந்து விரட்டினால் தான் சினிமா உருப்படும்," என ஆதங்கப்பட்டார் நேதாஜி பிரபு.