இந்தி நடிகை தனுஸ்ரீ தத்தாவை பிரபல நடிகர் நானா படேகர் தொடக்கூடாத இடத்தில் தொட்டதாக பிரபல பத்திரிகையாளர் கூறியுள்ளார். 10 ஆண்டுகளுக்கு முன்னர் படப்பிடிப்பின் போது பாலியல் ரீதியில் தன்னை நடிகர் நானா படேகர் தொந்தரவு செய்ததாகவும், அதுகுறித்து அப்போது முதல் தற்போது வரை யாரும் வாய்திறக்கவில்லை என்று நடிகை தனுஸ்ரீ தத்தா கூறியிருந்தார். 10 ஆண்டுகளுக்கு முன்னர் நடந்த சம்பவத்தை பற்றி தனுஸ்ரீ தற்போது ஏன் பேசுகிறார் என்று விமர்சனங்கள் எழுந்தன. 

இந்த நிலையில் தனுஸ்ரீ தத்தா – நானா படேகர் பிரச்சனையை தான் நேரடியாக பார்த்ததாக பிரபல பத்திரிகையாளர் ஜானைஸ் ட்விட்டரில் விரிவாக எழுதியுள்ளார். தனது ட்விட்டர் பக்கத்தில் பத்திரிகையாளர் ஜனைஸ் கூறியிருப்பதாவது, அப்போது நான் ஆஜ்தக் மற்றும் ஹெட்லைன்ஸ் டுடே தொலைக்காட்சியில் வேலை பார்த்துக் கொண்டிருந்தேன். ஹார்ன் ஓகே பிளீஸ் படத்தின் படப்பிடிப்பு தொடர்பான செய்தியை சேகரிக்க எனக்கு அசைன்மென்ட் கொடுக்கப்பட்டது. 

நான் படப்பிடிப்பு தளத்திற்கு சென்று இருந்த போது படப்பிடிப்பு நடைபெறவில்லை. நடிகை தனுஸ்ரீ தத்தாவிடம் ஒருவர் வாக்குவாதம் செய்து கொண்டிருந்தார். சொல்லப்போனால் தனுஸ்ரீயை அந்த நபர் மிரட்டிக் கொண்டிருந்தார் என்றே கூறலாம். பிறகு தான் தெரிந்தது அந்த நபர் தயாரிப்பாளர் என்றும், நடிகை தனுஸ்ரீயை தொடர்ந்து நடனம் ஆட வலியுறுத்திக் கொண்டிருந்தார். ஆனால் தனுஸ்ரீ நானா படேகருடன் நடனம் ஆட முடியாது என்று மறுத்துக் கொண்டிருந்தார். 

பிறகு ஒரு வழியாக தயாரிப்பாளரின் மிரட்டலுக்கு பயந்து நானாவுடன் நடனம் ஆட தனுஸ்ரீ ஒப்புக் கொண்டார். பாடம் ஒலிபரப்பாகியது. தனுஸ்ரீ நடனம் ஆடிக் கொண்டிருந்தார். அப்போது தனுஸ்ரீயை நெருங்கியபடி நடனம் ஆடிக் கொண்டிருந்த நானா திடீரென தனுஸ்ரீயை தொடக்கூடாத இடத்தில் தொட்டுவிட்டார். இதனால் நடனம் ஆடுவதை நிறுத்திய தனுஸ்ரீ அழுதுகொண்டே தனது கேரவேனுக்குள் சென்றுவிட்டார். ஆனால் நானாவோ தனுஸ்ரீக்கு சிறிது கூட தொழில் பக்தி இல்லை என்று கூறிவிட்டு அங்கே அமர்ந்திருந்தார். சிறிது நேரத்தில் படப்பிடிப்பு தளத்தில் இருந்த சில குண்டர்கள் தனுஸ்ரீ இருந்த கேரவேனை சூழ்ந்து கொண்டு தட்ட தொடங்கினர். 

மேலும் தனுஸ்ரீயை மிகவும் ஆபாசமாக திட்டினர். இவை எல்லாவற்றையும் அமைதியாக நானா படேகர் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார். பின்னர் தனுஸ்ரீயின் பெற்றோரும், போலீசாரும் அங்கு வந்தனர். போலீசான் தனுஸ்ரீயை படப்பிடிப்பு தளத்தில் இருந்து வீட்டிற்கு அழைத்துச் சென்றனர். ஆனால் தனுஸ்ரீயின் காரையும் சூழ்ந்து கொண்டு நானாவின் குண்டர்கள் தாக்கினர். இதனால் தனுஸ்ரீயின் கார் சேதம் அடைந்தது. அப்போது நான் தனுஸ்ரீ அருகில் சென்று என்ன நடந்தது என்று கேட்டேன். அதற்கு வீட்டிற்கு வருமாறு கூறினார். மறுநாள் நான் தனுஸ்ரீ வீட்டிற்கு சென்றேன்.

 

 அப்போது படப்பிடிப்பு தொடங்கியது முதலே நானா என்னை படுக்கைக்கு அழைத்தார். நான் தொடர்ந்து மறுத்து வந்தேன். இந்த நிலையில் பாடலுக்கு நடன ரிகர்சல் நடந்தது. ரிகர்சலின் போது என் அருகில் கூட நானா வருவது போன்ற காட்சி கிடையாது. ஆனால் படப்பிடிப்பு தளத்தில் திடீரென நடன அசைவுகளை மாற்றினர். என்னை மிகவும் ஆபாசமாக நடனம் ஆட வைத்தனர். நான் அனைத்தையும் பொறுத்துக் கொண்டேன். ஆனால் நானா தொடக்கூடாத இடத்தில் என்னை தொட்டதால் நான் தொடர்ந்து ஆட மறுத்துவிட்டேன் என்று என்னிடம் தனுஸ்ரீ கூறினார். நானா படேகர் மித தனுஸ்ரீ கூறியிருந்த புகாருக்கு பத்திரிகையாளர் அளித்துள்ள சாட்சியம் இந்திபட உலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.