’ஓங்கி அடிச்சா ஒன்னரை டன் வெயிட்டுடா’ என்ற வசனத்தால் அதிக மன உளைச்சலுக்கு ஆளானவர்களில் நீங்களும் ஒருவர் எனில் இந்த நற்செய்தி உங்களுக்குத்தான்,. ஹரியுடன் அடுத்து இணைவதாக இருந்த ஆறாவது படத்துக்கு நோ’ சொல்லிவிட்டாராம் நடிகர் சூர்யா.

’தானா சேர்ந்த கூட்டம்’ படத்தை தொடர்ந்து சூர்யா செல்வராகவன், ஹரி, சுதா கொங்காரா, கே.வி.ஆனந்த் படங்களில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியானது. ஒரு மாதத்திற்கு முன்பு படத்திற்கு ’யானை’ என்று தலைப்பு வைத்திருப்பதாகவும் ’என்ஜிகே’, ’காப்பான்’ படங்களுக்கு பிறகு சூர்யா ஹரி படத்தில் நடிப்பார் என்றும் கூறப்பட்டது.

சூர்யா தற்போது சுதா கொங்காரா இயக்கத்தில் ’சூரரைப் போற்று’ படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்த நிலையில், தவிர்க்க முடியாத சில காரணங்களால் ஹரி படத்தில் இருந்து சூர்யா விலகியிருப்பதாக நம்பத்தகுந்த வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

’ஆறு’ படத்தில் துவங்கி ‘வேல்’ வழியாக ‘சிங்கம் 1,2,3 என்று இந்த கூட்டணி ஏற்கனவே 5 படங்களில் இணைந்திருக்கும் நிலையில் ஆறாவது படத்துக்கு சூர்யா நோ சொன்னதற்குக் காரணம் இனி மசாலாப் படங்களிலிருந்து கொஞ்சம் ஒதுங்க வேண்டும் என்று நினைத்தது தானாம்.

போலீஸ் கதையாக உருவாக இருந்த இந்த படத்தில் இருந்து சூர்யா விலகியதையடுத்து இந்த படத்தில் நடிக்க ஹரி, ஜெயம் ரவியை அணுகியதாகவும், தேதி பிரச்சனையால் அவரும் ஒப்பந்தமாகவில்லை என்றும் சில தகவல்கள் பரவி வருகின்றன. எனினும் இதில் உண்மையில்லை என்றும், ஹரி தற்போது தனது அடுத்த படத்திற்கான பணியில் பிசியாகி இருப்பதாகவும், விரைவில் அறிவிப்பு வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.