’அக்கா வித் இக்கா’[சிஸ்டர் வித் ப்ரதர்] என்ற கமெண்ட்டுடன் மலையாள சூப்பர் ஸ்டார் மம்முட்டிக்கு அருகே கவர்ச்சி நடிகை சன்னி லியோன் அமர்ந்திருக்கும் படம் வலைதளங்களில் வைரலாகிவருகிறது. இப்படத்தை மலையாள நடிகர் அஜூ வர்கீஸ் தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்திருக்கிறார்.

மலையாளத்தில் மம்முட்டி கதாநாயகனாக நடிக்கும் திரைப்படம் ’மதுர ராஜா’. மோகன்லால் நடித்த புலி முருகன் படத்தை இயக்கிய விஷாக் இந்தப் படத்தை இயக்குகிறார். ஆக்‌‌ஷன் காட்சிகள் நிறைந்த இப்படத்தில் மம்முட்டியுடன் இணைந்து’சுப்ரமணியபுரம்’ ஜெய் நடிக்கிறார். மம்முட்டியின் தம்பியாக ஜெய் நடிப்பதாக கூறப்படுகிறது.

2010-ம் ஆண்டு மம்முட்டி, பிரித்வி ராஜ் இணைந்து நடித்த போக்கிரி ராஜா திரைப்படத்தின் இரண்டாம் பாகமாக இப்படம் உருவாகிறது. முதல் பாகத்தில் நடித்த பிரித்வி ராஜுக்கு இதில் சிறப்பு தோற்றம் வழங்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் சன்னி லியோன் ஒரு பாடலுக்கு நடனமாடுகிறார். கோபி சுந்தர் இசையமைக்க, ஷாஜி குமார் ஒளிப்பதிவு செய்கிறார்.

சன்னி லியோனின் முதல் மலையாளப்படம் இது. கடந்த இரு வருடங்களுக்கு முன்பு சன்னி லியோன் கொச்சிக்கு விசிட் அடித்தபோது சில மணி நேரங்கள் அந்நகரமே டிராஃபிக் ஜாமால் ஸ்தம்பித்தது நினைவிருக்கலாம். அதுபோன்றதொரு சிக்கலை மறுபடியும் சந்தித்து விடக்கூடாது என்பதற்காக சன்னி லியோன் மம்முட்டி தொடர்பான பாடல் காட்சி சமாச்சாரத்தை பரம ரகசியமாக வைத்திருந்ததாம் படக்குழு.