ஆரம்பத்தில் சிறு சிறு வேடங்களில் நடித்து வந்த சூரி “வெண்ணிலா கபடிக்குழு” படத்தில் நடித்த பிறகு மக்கள் மனதில் பதிய துவங்கினர். தொடர்ந்து வெள்ளித்திரையில் முன்னேறி வரும் இவர் சமீபத்தில் வெளியான கடைக்குட்டி சிங்கம் படத்தில் காமெடியில் கலக்கி இருந்தார். தொடர்ந்து சிவகார்த்திகேயனுடன் சீம ராஜா படத்திலும் நடித்திருக்கிறார். 

தமிழ் திரையுலகில் இருக்கும் காமெடி நடிகர்களில் மிக முக்கியமானவராக தற்போது இடம் பிடித்திருக்கும் சூரியின் பிறந்த நாள் சிலதினங்களுக்கு முன்னர் கொண்டாடப்பட்டது.


அவருடன் நடித்திருந்த பல திரைத்துறை பிரபலங்களும் அவருக்கு நேரிலும் சமூகவலைதளங்களிலும் வாழ்த்துக்கள் தெரிவித்திருந்தனர். தன் பிள்ளைகளுடன் தான் கொண்டாடிய பிறந்தநாள் குறித்து மகிழ்ச்சியுடன் சூரி பதிவிட்டிருந்த வீடியோ தற்போது இணையத்தில் பிரபலமாகி இருக்கிறது. 

“என் மகள் வெண்ணிலாவும் மகன் சர்வானும் வாங்கிக் கொடுத்த பிரமாண்டமான வீட்டில் முதன்முறையாக ஆடம்பரமாக என் பிறந்த நாளை கொண்டாடினேன்... வீடு வாங்கிக் கொடுத்த செல்லங்களுக்கு நன்றி!” என அந்த ட்வீட்டில் சூரி தெரிவித்திருக்கிறார்.  அவரது மகன் சர்வான் மற்றும் மகள் வெண்ணிலா ஆகிய இருவரும் இணைந்து சூரிக்கு பிறந்த நாள் பரிசாக தங்கள் சேமிப்பில் இருந்து ஒரு அழகான பொம்மை வீடு வாங்கி பரிசளித்து இருக்கின்றனர். அதை தான் சூரி அவ்வாறு பிரம்மாண்டமான வீடு என குறிப்பிட்டிருக்கிறார்.

அந்த வீட்டினுள் வைத்து தான் கேக் வெட்டி தன் பிறந்தநாளை கொண்டாடி இருக்கிறார் சூரி.
 பொம்மை வீடானாலும் தன் குழந்தைகள் தந்த பரிசு என்பதால் அதற்கு அவர் அளித்திருக்கும் முக்கியத்துவம் மிகவும் பாராட்டுதலுக்குரியது. ஒவ்வொரு பெற்றோருக்குமே இந்த வீடியோ ஒரு பாடம் தான். குழந்தைகள் செய்யும் சின்ன விஷயங்களை கூட பாராட்டி அவர்களை ஊக்கப்படுத்தும் போது அவர்களுக்கு தன்னம்பிக்கையும், பெற்றோர் மீதான அன்பும்  அதிகரித்திடும் எனும் உளவியல் காரணியே இந்த வீடியோவில் மறைமுகமாக இடம் பெற்றிருக்கிறது.