சோனம் கபூர் திருமணம் நடைபெற்ற பங்களாவில் நள்ளிரவில் புகுந்த திருடன் லட்சக்கணக்கான ரூபாய் பணம் மற்றும் நகைகளை திருடி சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

  

நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூரின் தம்பி அனில் கபூரின் மகள் சோனம் கபூர். இவர் பாலிவுட்டில் அதிகம் சம்பளம் பெறும் முன்னணி நடிகைகளில் ஒருவர். ராஞ்சனா திரைப்படம் இவரது தொழில் வாழ்க்கையில் திருப்புமுனையை ஏற்படுத்தியது. கடந்த மார்ச் எட்டாம் தேதி நடிகை சோனம் கபூருக்கும் அவரது காதலர் ஆனந்த் அகுஜா வுக்கும் மும்பையில் திருமணம் நடைபெற்றது. 

பாலிவுட் பட உலகில் மிகவும் பேசப்பட்ட திருமணமாக இது அமைந்தது. இத் திருமணமானது சோனம் கபூரின் உறவினருக்கு சொந்தமான மும்பை பந்த்ராவில் உள்ள பங்களாவில் கோலாகலமாக நடந்தது. இந்த பங்களாவில் தான் கடந்த 20ஆம் தேதி திருடு போயுள்ளது. இருபதாம் தேதி நள்ளிரவு அங்கு புகுந்த மர்ம நபர் வீட்டில் இருந்த நகை மற்றும் பணத்தை சுருட்டிக் கொண்டு தப்பிச் சென்றுள்ளான். பங்களாவின் ஜன்னல்கள் மற்றும் சிமெண்ட் சிலாப்புகளை பிடித்துக்கொண்டு நான்காவது மாடிக்கு சென்ற திருடன் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான நகை பொருட்கள் மற்றும் பணம் செல்போன் ஆகியவற்றை திருடிக்கொண்டு தப்பி சென்றுள்ளார். 

அந்த சமயத்தில் அனைவரும் தூங்கிக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. காவலாளியும் உறங்கிக் கொண்டிருந்ததால் திருடனை பிடிக்க முடியவில்லை என்று சொல்லப்படுகிறது. இதுகுறித்து பந்த்ரா காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது. இதையடுத்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் திருடனை தேடி வருகின்றனர். கொள்ளையன் வீட்டிற்குள் நுழைந்தது முதல் திருடிச்சென்றது வரை அனைத்தும் சிசிடிவி கேமராவில் பதிவாகி இருப்பதால் அதனடிப்படையில் திருடனை தேடி வரும் போலீசார் விரைவில் கைது செய்வோம் என்று உறுதிபடத் தெரிவித்துள்ளனர். 

கடந்த பிப்ரவரி மாதம் சோனம் கபூரின் வைர நெக்லஸ் திருடு போன நிலையில் தற்போது அவர் தொடர்புடைய பங்களாவில் திருட்டு நடந்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.