பிரபல நடிகை டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டதை தொடர்ந்து படப்பிடிப்பு நிறுத்தப்பட்டுள்ளது. ஆசிக் 2, ஓகே ஜானு, ஏபிசிடி 2 உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்தவர் நடிகை ஷ்ரதா கபூர். தமிழ், இந்தி, தெலுங்கு ஆகிய மொழிகளில் தயாராகி வரும் சாஹோ படத்திலும் நடிகர் பிரபாஸூக்கு ஜோடி இவர் தான். இவர் தற்போது இந்திய பேட்மிண்டன் வீராங்கனை சாய்னா நேவாலின் வாழ்க்கை வரலாற்றுத் திரைப்படத்தில் நடித்து வருகிறார். சாய்னா என்று பெயரிடப்பட்டுள்ள இப்படத்தை இயக்குனர் அமோல் குப்தே இயக்கி வருகிறார். 

படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்ற நிலையில், கடந்த மாதம் 27ஆம் தேதி முதல் நடிகை படப்பிடிப்புக்கு வரவில்லையாம். ஒட்டுமொத்த குழுவும், என்னாச்சு, ஏதாச்சுனு ஒரே மனக்குழப்பத்தில் ஆழ்ந்தனராம். காரணம் என்னவென்று பார்க்கையில், நடிகைக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு உள்ளது அறிந்து அதிர்ந்து விட்டதாம் படக்குழு. 

படப்பிடிப்பு நடைபெற்றுக் கொண்டிருந்த சில நாட்களிலேயே நடிகை ஷ்ரதா கபூர், உடல் பலவீனம் அடைந்ததை உணர்ந்து அதை தெரிவித்ததாகவும், பின்னர் படப்பிடிப்புக்கு வரவே இல்லை என்றும் படக்குழு தெரிவித்துள்ளது. மருத்துவமனையில் பரிசோதித்து பார்த்த பின்னர் நடிகைக்கு டெங்கு இருப்பது உறுதி செய்யப்பட்டதாகவும் இதை அடுத்து 27ஆம் தேதி முதல் படப்பிடிப்புக்கு வருவதை ஷ்ரதா கபூர் தவிர்த்து விட்டதாகவும் கூறப்பட்டுள்ளது. தற்போது அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும், ஒன்றிரண்டு தினங்களில் மீண்டும் அவர் படப்பிடிப்பு வந்து விடுவார் என்றும் குழு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதற்கிடையில், நேரத்தை வீணாக்க விரும்பாத இயக்குனர் அமோல் குப்தே, சாய்னா நேவாலின் சிறு வயது கதாப்பாத்திரத்தை இயக்கி முடிக்க திட்டமிட்டுள்ளார். துணை நடிகர், நடிகைகளுக்கான காட்சிகளையும் இடைப்பட்ட காலத்தில் படமாக்கி விட முடிவு செய்துள்ளார் அமோல் குப்தே.. நடிகை பல்வேறு படங்களில் பிஸியாக உள்ள சூழலில், குறிப்பிட்ட நேரத்தை மட்டுமே ஒதுக்கி இந்தப் படத்திற்கு நடித்துக் கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் யார் கண் பட்டதோ தெரியவில்லை., தற்போது அந்த நடிகைக்கு டெங்கு வந்து விட்டது என்று புலம்புகின்றனர் படக்குழுவினர்.