சூப்பர் ஸ்டார் ரஜினி நடிக்கும் 2.ஓ திரைப்படம் நவம்பர் 29ஆம் தேதி வெளியாக உள்ள நிலையில், இத்தனை மாதங்களாக தள்ளிப் போனதற்கு, தகுதியில்லாத ஒரு நிறுவனமே காரணம் என இயக்குநர் ஷங்கர் குற்றஞ்சாட்டி இருப்பது, திரையுலகில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 

ரூ.545 கோடி செலவில், லைக்கா புரொடக்சன்ஸ் நிறுவனம் தயாரிப்பில், ஷங்கர் இயக்கும் படம் 2.ஓ. ஏற்கெனவே சூப்பர் ஸ்டார் ரஜினி – இயக்குநர் ஷங்கர் கூட்டணியில் வெளியான எந்திரன் பிரமாண்ட வெற்றி பெற்ற நிலையில், அதன் இரண்டாம் பாகமாக வெளியாக இருக்கும் 2.ஓ படமும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.


 
எனவே, சூப்பர் ஸ்டார் ரஜினியின் ரசிகர்கள் மிக ஆவலோடு பட வெளியீட்டை எதிர்நோக்கி காத்திருக்கும் நிலையில், தொடர்ந்து, வெளியீட்டு தேதி தள்ளிக் கொண்டே செல்கிறது. இது ஏன்? என்ற கேள்விக்குஇயக்குனர் ஷங்கர் பதில் அளித்துள்ளார். 2.ஓ திரைப்படத்தில் 2,100 கிராஃபிக்ஸ் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. அதை செய்யும் பொறுப்பை குறிப்பிட்ட ஒரு நிறுவனத்திற்கு வழங்கியிருந்தோம். அவர்கள் ஒரு குறிப்பிட்ட தேதியில் வேலைகள் முடிந்துவிடும் என கூறியதால், முதலில் கடந்த ஆண்டு தீபாவளிக்கு படத்தை வெளியிட திட்டமிட்டோம்.


 
ஆனால், திடீரென கிராஃபிக்ஸ் காட்சிகளை இன்னும் முடிக்கவில்லை என அந்த நிறுவனம் கூறியது. சரி… என்று கூறிவிட்டு, அவர்களின் ஆலோசனையின் பேரிலேயே, கடந்த ஜனவரிக்கு படத்தை வெளியிட திட்டமிட்டதோடு, துபாயிலும் இசை வெளியீட்டு விழாவை நடத்தினோம். அப்போது, எங்களை தொடர்பு கொண்ட கிராஃபிக்ஸ் நிறுவனம், இன்னும் பணிகள் முடியாததால், ஜனவரிக்கும் படத்தை வெளியிடுவது சிக்கல் எனக் கூறியது. அதனால் நான் அதிர்ச்சி அடைந்தேன். நொந்துபோனேன் என்று கூறியுள்ளார் இயக்குநர் ஷங்கர்.


 
அதன்பிறகும் பணிகளை முடிக்காத கிராஃபிக்ஸ் நிறுவனம், இன்று போய் நாளை வா என்ற கணக்கில் இழுத்தடித்ததாக விவரித்த இயக்குநர் ஷங்கர், அதன்பிறகுதான், 2.ஓ படத்தின் கிராஃபிக்ஸ் காட்சிகளை செய்ய குறிப்பிட்ட அந்த நிறுவனத்திற்கு தகுதி இல்லை என்பதை தெரிந்து கொண்டதாக கூறியுள்ளார்.அதனால், வேறு இரு நிறுவனங்களை தொடர்பு கொண்டு, அவர்களுடன் பேசிய பிறகு 2.ஓ படத்தின் கிராஃபிக்ஸ் காட்சி பணிகளை ஒப்படைத்து இருப்பதாக கூறியுள்ள ஷங்கர், இதுவே படம் வெளியாவதுதொடர்ந்து காலதாமதமாகி வருவதற்கு காரணம் என்றும் விளக்கியுள்ளர். 

ஏற்கனவே கிராஃபிக்ஸ் காட்சிகளைசெய்த நிறுவனத்திடம் இருந்து, மற்றொரு நிறுவனத்திடம் அந்தப் பணியை மாற்றுவது மிகவும் சிரமமாகஇருந்தது. அதாவது, நன்கு வளர்ந்த ஒருமரத்தை வேருடன் பிடுங்கி, மற்றொரு இடத்தில் நடுவது போன்றஉணர்வை ஏற்படுத்தியது என்று கூறியுள்ளார் இயக்குநர் ஷங்கர். இருப்பினும், இந்த முறை திட்டமிட்டபடி படம் குறிப்பிட்ட தேதியில் வெளியாகும் என்றும் உறுதி அளித்துள்ளார் இயக்குநர் ஷங்கர்.