கவர்ச்சி நடிகை ஷகீலாவின் வாழ்க்கை வரலாற்றுப் படத்தில், ஷகீலாவே சிறப்புத் தோற்றத்தில் வருவதாக, அப்படத்தின் இயக்குநர் தெரிவித்துள்ளார். 

திரைத்துறையில் நுழையும் ஒவ்வொருவருக்கும், நாம் புகழின் உச்சியில் கொடிகட்டி பறக்க வேண்டும் என்ற எண்ணம் இருக்கும். அதன்படி, திரைத்துறையில் நுழைந்ததில் இருந்து, தற்போது வரை திரையுலகில் கொடிகட்டிப் பறப்பவர் மலையாள கவர்ச்சி நடிகை ஷகீலா தான். இவர் நடித்த கவர்ச்சி படங்கள் மலையாள சூப்பர் ஸ்டார்களாக விளங்கும் மம்முட்டி, மோகன்லால் உள்ளிட்டோரின் படங்களையே ஓவர்டேக் செய்த வரலாறும் உண்டு.

 

மலையாள திரைப்படங்களில் நடிக்க ஷகீலாவுக்கு தடை விதிக்கப்பட்டதால், கோலிவுட் பக்கம் காற்று வாங்க வந்த ஷகீலா, அப்படியே டாலிவுட்டில் நடித்து வருகிறார். தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாக்களில் ஷகீலா நகைச்சுவை நடிகையாக இருந்தாலும், அவருக்கான கவர்ச்சி உலகம் இன்னும் அவரை கைவிடவில்லை. அவருக்கென இருந்த மாஸ், இப்போதும் இருக்கிறது. அவர் திரையில் தோன்றினாலே விசில் பறக்கிறது.

 

இந்நிலையில் தற்போது இவரது வாழ்க்கை வரலாற்றுக் கதை இந்தியில் படமாக்கப்பட்டு வருகிறது. இந்திரஜித் லங்கேஸ் இயக்கும் இந்தப் படத்தில், ஷகீலாவாக ரிச்சா சதா நடித்து வருகிறார். இந்தப் படத்தின் ஷூட்டிங் மும்முரமாக நடைபெற்று வரும் நிலையில், ஷகீலாவும் இந்த படத்தில் நடித்துள்ளதாக, இயக்குநர் இந்திரஜித் லங்கேஸ் தெரிவித்துள்ளார். 

படப்பிடிப்பு தொடங்குவதற்கு முன்பு ஷகீலாவிடம் சில விசயங்களை கேட்டுத் தெரிந்து கொண்டு, அதற்கேற்ப நடிப்பதற்காக, ரிச்சா சதா சந்தித்ததாக கூறியுள்ள இயக்குநர் அது தொடர்பான புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளார். அப்போது, தானும் சந்தித்து பேசியபோது, அவரது புகழை படத்திலும் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று தோன்றியதால், சிறப்பு தோற்றத்தில் ஷகீலாவை வரவைத்துள்ளதாக கூறியுள்ள இந்திரஜித், திரையிலும், திரைக்கு பின்னாலும் ஷகீலாவின் குணாதிசயம் தம்மை மிகவும் ஈர்த்துவிட்டதாக தெரிவித்துள்ளார்.

ஷகீலாவின் வாழ்க்கையில் நடந்த விசயங்களை உண்மையாக, அப்படியே எடுக்க வேண்டும் என முடிவு செய்ததாகவும், இதற்காகவே, ரிச்சா பல நாட்கள் ஷகீலாவுடன் இருந்து, அவரது நடை, உடை, பாவனை என அனைத்தையும் கற்றதாக இயக்குநர் கூறியுள்ளார். இந்த படத்திற்காக, பல ரகசியத் தகவல்களை ஷகீலா தந்ததாக சொல்லும் இயக்குநர் இந்திரஜித், அவருடனான படப்பிடிப்பு அனுபவம் மிகவும் அருமையானது என்றும் கூறியுள்ளார்.