சின்னத்திரை நடிகை பிரியங்கா வீட்டின் படுக்கை அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம்  திரைதுரையினரிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருமணம் ஆகி நான்கு வருடங்கள் மட்டுமே ஆவதால் ஆர்டிஓ விசாரணைக்கு போலீசார் உத்தரவிட்டுள்ளனர்.

மதுரையை சேர்ந்த பிரியங்காவிற்கு தற்போது 33 வயது ஆகிறது. சிறுவயதில் இருந்தே நடிப்பின் மீது இவருக்கு ஆர்வம் இருந்ததால், கல்லூரியில் படிக்கும் போதே தொலைக்காட்சி தொடர்களில் சிறு சிறு வேடங்களில் நடிக்க துவங்கினார். மேலும் சில திரைப்படங்களில் துணை நடிகையாக நடிக்க வாய்ப்பு கிடைத்தது. தற்போது சின்னத்திரையில் திறமையான நடிகை என்கிற பெயரோடு பல சீரியல்களில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் இவருக்கும் கூடை பந்து பயிற்சியாளர் அருண் பாலன் என்பவருக்கும் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. திருமணத்திற்கு பின் வளசரவாக்கத்தில் சந்தோஷமாக தனது திருமணம் வாழ்க்கையை தொடங்கிய பிரியங்காவிற்கு திருமணத்திற்கு பிறகு தான் அதிக சீரியல்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது. 

ஆரம்பத்தில் குழந்தை பெற்று கொள்வதை தள்ளி போட்ட இவர்,பின்பு குழந்தை பெற்றுக்கொள்ள கணவர் அருணுடன் இணைந்து சிகிச்சை மேற்கொண்டு வந்ததாக கூறப்படுகிறது. 

ஒரு நிலையில் இதன் காரணமாக இவர்கள் இருவருக்கும் கருத்து வேறுப்பாடு அதிகரித்தால், பிரியங்கா வளசரவாக்கம் பகுதியிலேயே தனியாக வீடு எடுத்து கடந்த 3 மாதங்களாக தங்கியுள்ளார்.

இந்நிலையில் இன்று காலை பிரியங்கா வீட்டில் வேலை செய்யும் வேலைக்கார பெண் சமையல் செய்ய வந்துள்ளார். அப்போது வீட்டின் முன் அதிகாலை போடப்பட்ட பால் எடுக்காததால் வீட்டின் கதவை தட்டியுள்ளார். பின் வெகு நேரம் ஆகியும் கதவு திறக்கப்படாததால், ஜன்னல் வழியாக உள்ளே பார்த்துள்ளார். அப்போது பிரியங்கா மின் விசிறியில் தூக்கு போட்டு தொங்கியுள்ளார். 

பின் இந்த சம்பவம் குறித்து வளசரவாக்கம் போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அங்கு வந்த போலீசார் இவரை உடலை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். அதை தொடர்ந்து நடிகை வீடு முழுவதும் போலீசார் தீவிர சோதனை நடத்தினர்.

பின்னர் இந்த சம்பவம் குறித்து வழக்கு பதுவு செய்து நடிகை ப்ரியங்கா இறந்தது குறித்து அவருடைய கணவர், அருண் பாலன் மற்றும் அவரது பெற்றோருக்கு தகவல் கொடுத்தனர். மேலும் திருணம் நடந்து நான்கு ஆண்டுகள் மட்டுமே ஆவதால் போலீசார் ஆர்.டி.ஓ விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளனர். 

மேலும் பிரியங்காவின் கைபேசியை கைப்பற்றி அவர் இறப்பதற்கு முன் யார் யாரிடம் பேசினார், இவருக்கு ஏதேனும் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டதா என தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.