பொங்கலுக்கு வெளியாகி இன்றுவரை வெற்றிக்கொடி நாட்டிக்கொண்டிருக்கும் ‘விஸ்வாசம்’ படத்தின் வசூல் நிலவரம் குறித்து பிரபல விநியோகஸ்தர்கள் முதல் பெட்டிக்கடை பெருமாள்சாமிகள் வரை ஆளாளுக்கு கருத்துச் சொல்லி முடித்திருக்கும் நிலையில், அப்படத்தின் நிஜமான தயாரிப்பாளரான சத்யஜோதி தியாகராஜன் முதல் முறையாக மனம் திறந்து பேசியுள்ளார்.

இதுகுறித்து கூறிய அவர்,’’இந்தப் படம்தான் எனது வாழ்நாளிலேயே ஆகச்சிறந்தது. இத்திரைப்படம் ஒரு ப்ளாக்பஸ்டர் வெற்றி. இதற்கான பாராட்டு அஜித், இயக்குநர் சிவா மற்றும் ஒட்டுமொத்த குழுவுக்கும் தான் செல்ல வேண்டும்.

இத்திரைப்படம் தமிழகத்தில் மட்டும் ரூ.125 கோடி முதல் ரூ.135 கோடி வசூல் செய்துள்ளது. விநியோகிஸ்தர்களின் வாழ்நாள் பங்கு என்பது ரூ.70 கோடி முதல் ரூ.75 கோடி வரை எட்டும். எந்த ஒரு அளவுகோலை வைத்து மதிப்பிட்டாலும் இந்த வசூல் வியப்புக்குரியது. படத்தின் கரு குடும்பம் குடும்பமாக வந்து ரசிகர்களை படம் பார்க்க வைத்தது. 600 திரையரங்குகளில் நாங்கள் படத்தை ரிலீஸ் செய்ய முடிந்தது எங்களுக்கு சாதகமாக அமைந்தது.

பெரிய ஹீரோக்களின் படத்தைப் பற்றி பேசும்போது இதுதான் முக்கிய அம்சம். 'விஸ்வாசம்' படத்துக்கு கடும் போட்டி நிலவிய போதும் மிகப்பெரிய ஓப்பனிங் இருந்தது. அஜித்தை எப்போது ஓப்பனிங் கிங் என்றுதான் அழைக்கிறோம். அவருக்கும் ரசிகர்கள் ஏராளம். அடிமட்ட அளவில் அவரது ரசிகர்களின் பலத்தை அறிந்துகொள்ளும் வகையில் அண்மையில் நான், தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டேன். ரசிகர் மன்றங்களைக் கலைத்துவிட்டாலும்கூட அவருக்கு மிகப்பெரிய ஆதரவு இருக்கிறது.

பி, சி, மார்கெட் எல்லாம் செயலிழந்துவிட்டன என்று சொன்னவர்கள் எங்கே? அந்த மையங்கள் எல்லாம் தமிழ் சினிமாவின் ஒருங்கிணைந்த பகுதி. சிறிய நகரங்களில் இன்னும் குடும்பத்துடன் பார்க்கும் படங்களுக்கு வரவேற்பு இருக்கிறது. 'விஸ்வாசம்' படத்துக்கு முன்னதாக 'கடைக்குட்டி சிங்கம்' என்ற படத்துக்கு மிகப்பெரிய வரவேற்பு இருந்தது. கமர்சியல் படங்கள் எல்லாம், பெண் ரசிகர்களைக் குறிவைத்து எடுக்கப்பட வேண்டும் என்பதே எனது கருத்து. அவர்களுக்குப் பிடித்தால் அது குடும்பப் படமாகும்’ என்று  சத்யஜோதி தியாகராஜன் தெரிவித்துள்ளார்.

ஆக ஒருவழியா பஞ்சாயத்து முடிஞ்சாச்சி. எல்லாரும் கலைஞ்சி போய் அவங்கவங்க புள்ளகுட்டிகள படிக்கவைக்கிற வழியைப் பாருங்க...