’அந்த மூன்று தகுதிகள் இருந்தால் போதும் அவர் எனது படங்கள் பார்க்கிற சாதாரண ரசிகராக இருந்தாலும் நான் அவரைத் திருமணம் செய்துகொள்ளத் தயார்’ என்று அரிதினும் அரிதான ஒரு வாய்ப்பை, இந்த செய்தியைப் படிக்கிற உங்களுக்கே உங்களுக்கு என்று வழங்கியிருக்கிறார் நடிகை ரகுல் பிரீத் சிங்.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகள் பட்டியலில் முன்னேறி வருபவர் நடிகை ரகுல் ப்ரீத் சிங். தமிழில் ’தடையறத் தாக்க’ என்ற படத்தின் மூலம் அறிமுகமானார். இப்படத்தைத் தொடர்ந்து, ’புத்தகம்’, ’என்னமோ ஏதோ’, ’ஸ்பைடர்’, ’தீரன் அதிகாரம் ஒன்று’, தேவ்’ ஆகிய படங்களில் நடித்துள்ளார். இதில், தீரன் அதிகாரம் ஒன்று தவிர அத்தனையும் நல்லபடியாக ஊத்திக்கொண்ட படங்கள். ஆனாலும் தெலுங்கில் பெத்த பெத்த ஹிட்கள் கொடுத்ததால் ரகுலின் தமிழ் மார்க்கெட்டும் சற்றும் இறங்கவில்லை.

இந்த நிலையில், சூர்யாவுடன் இணைந்து இவர் நடித்துள்ள ’என்ஜிகே’ படம் வரும் 31ம் தேதி வெளியாக உள்ளது. செல்வராகவன் இயக்கியுள்ள இப்படத்தில், சாய் பல்லவி, தேவராஜ், பாலா சிங், தலைவாசல் விஜய், இளவரசு, உமா பத்மநாபன், குரு சோமசுந்தரம் ஆகியோர் பலர் நடித்துள்ளனர். இப்படம் வெளியாகவுள்ள நிலையில், இப்படத்தின் புரோமோஷன் பணிகளில் படக்குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர்.

அதையொட்டி, பிரபல இணையதள ஊடகம் ஒன்றிற்கு பேட்டியளித்த ரகுல்,  'என்ஜிகே படத்தில் எனக்கு நல்ல கதாபாத்திரம் கிடைத்தது, இரண்டு ஹீரோயின்கள் இருந்தாலும் இருவருக்குமே தேவையான அளவு முக்கியத்துவம் கிடைத்தது. படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது' என்றார்.

இதைத் தொடர்ந்து தனது வருங்கால கணவர் குறித்தும் வாய்திறந்த ரகுல் , ‘எனது வருங்காலக் கணவர் குறித்து எனக்கு பெரிய எதிர்பார்ப்பு ஒன்றும் இல்லை. அவர் 6 அடி  உயரம் இருக்க வேண்டும். உண்மையான மனிதராக, நல்லவராக இருக்கவேண்டும். வாழ்க்கை மீது ஒரு அதீத பிடிப்பு இருக்கணும். இதுபோல் இன்னும் நிறைய கண்டிஷன்கள் இருந்தது. ஆனால் என் அண்ணன்  கிண்டல் செய்ததால் குறைத்துக் கொண்டேன். நான் நீண்ட நாட்களாகவே சிங்கிளாக தான் இருக்கிறேன். இந்த கண்டிசன்கள் ஒத்துப்போகும் ஒருவருடன் விரைவில் மிங்கிள் ஆக விரும்புகிறேன்’ என்கிறார். இந்த மாதிரி ஒரு வாய்ப்பு லைஃப்ல கிடைக்குமா பாஸ்.