டிஸ்கவரி சேனலில் ஒளிபரப்பாகும் மேன் Vs வைல்ட் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவதன் மூலம் உலகம் முழுவதும் அறியப்படுபவர் பியர் கிரில்ஸ். காடு, வன உயிரினங்களின் தன்மையை விளக்கும் பியர் கிரில்ஸ், காட்டுக்குள் சிக்கினால் உயிர் பிழைப்பது எப்படி என்பது குறித்து நிகழ்ச்சி மூலம் விளக்கம் அளிப்பார்.

இந்நிலையில் இவருடன் நடிகர் ரஜினிகாந்த் கடந்த ஜனவரி மாதம் மேன் VS வைல்ட் நிகழ்ச்சியின் படப்பிடிப்பில் கலந்து கொண்டார்.  இன்று ஒளிபரப்பாகும் என,, டிஸ்கவரி சேனல் கூறியிருந்த நிலையில்,  சரியாக 8  மணிக்கு இந்த நிகழ்ச்சி துவங்கியது.

ஆரம்பமே அசத்தல் என கூறும் அளவிற்கு... Buggy  வகை காரில்... மாஸ் என்ட்ரி கொடுத்தார் தலைவர். உங்களை பார்த்தது மேஜிக் போல் உள்ளது என பியர் கிரில்ஸை வரவேற்ற ரஜினிகாந்த். 

நிகழ்ச்சி துவங்கியதுமே ரஜினியின் வாழ்க்கையை பற்றி பியர்  கிரில்ஸ் கேட்டறிந்தார். 5  வருடங்கள் 18 வயது முதல் 23 வயது வரை பஸ் கண்டக்டராக வேலை பார்த்ததாகவும், பின் பிலிம் சிட்டியில் படித்து, இயக்குனர் கே.பாலச்சந்தர் இயக்கத்தில் திரைப்படத்தில் நடிக்க துவங்கி நடிகராக உயர்ந்த கதையை தெரிவித்தார்.

மேலும் காட்டுக்குள் பயணிக்க துவங்கும் முன்பே , இங்கு பாம்புகள் அதிகமாக இருக்கும் என்றும், மிகவும் கவனமாக செல்ல வேண்டியது அவசியம் என ரஜினிகாந்திடம் பியர் கிரல்ஸ் முன் கூட்டியே அறிவித்து காட்டுக்குள் பயணத்தை துவங்கினர். இருவரும் செல்லும் போது, டிஸ்கேவாரி நிகழ்ச்சியில் உங்களுடன் கலந்து கொள்வேன் என கனவில் கூட நினைக்க வில்லை என மிகவும் பெருமையாக பேசினார்.