‘தனது ஒவ்வொரு பட வெளியீட்டின்போதும் அரசியல் பஞ்ச் டயலாக் பேசி ரசிகர்களை ரஜினி ஏமாற்றி வரும் பழைய உத்தியையே ‘சர்கார்’ படத்தின் மூலம் விஜய் துவங்கியிருக்கிறார். அன்று ரஜினிக்குப் பின்னால் இருந்து ஆர்.எம்.வீரப்பன் துவங்கி வைத்ததை இன்று கலாநிதி மாறன் கையில் எடுத்திருக்கிறார் என்கிறார் பேராசிரியரும், பிரபல விமர்சகருமான அ.ராமசாமி.

இதோ அவரது கருத்து:

’படங்களின் வியாபார வெற்றிக்காகப் பேசப்படும் அரசியல் உள்நோக்க வசனங்கள் -பொலிட்டிகல் பஞ்ச் டயலாக் -சினிமாவின் பொதுப் பார்வையாளர்களுக்கானதல்ல. உச்ச நடிகர்கள் அவர்களின் தீவிர ரசிகர்களுக்காகச் சொல்பவை. இப்போது வரும் எனது சினிமாவின் வெற்றிக்காக வேலை செய்யுங்கள்; ஆனால் பலனை இப்போது எதிர்பார்க்காதீர்கள். இப்போது நீங்கள் செய்யும் வேலைக்கான பலனை நான் அரசியலுக்கு வரும்போது உங்களுக்கு அளிப்பேன் என்ற மறைமுக வாக்குறுதி. சினிமா நடிகனாக இருக்கும்போது என்னால் பொருளியல் லாபத்தை உங்களுக்குத் தர இயலாது. ஆனால் அரசியல்வாதியாகும்போது பொதுச்சொத்திலிருந்து உங்களுக்கான லாபத்தை - பங்கை என்னைப் பயன்படுத்தி எடுத்துக்கொள்ளும் வாய்ப்பிருக்கிறது. அதுவரை எனக்கு ரசிகர்களாக - என் படத்துக்கு விளம்பரம் செய்யும் தீவிர ரசிகா்களாக -இருங்கள். இதுதான் அவ்வசனங்களின் உள்ளர்த்தம்.


நான் அரசியலுக்கு வரும்போது நீ கட்சியின் பொறுப்பாளனாக ஆகிவிடலாம் என்று ஆசைகாட்டி ஏமாற்றும் உத்தி. இதனைத் தொடங்கிய முன்னோடி ரஜினிகாந்த். அப்படிச் சொல்லவைத்து லாபம் ஈட்டியவர் பாட்ஷா படத்தைத் தயாரித்த தயாரிப்பாளர் ஆர். எம்.வீரப்பன். 25 ஆண்டுகளாக ரஜினிகாந்த் ஒவ்வொரு பட வெளியீட்டிற்கு முன்னும் -முன்வைப்பு - ப்ரோமோ - நிகழ்ச்சிக்கு முன்னும் இதைச் செய்கிறார். அவரை எல்லாவிதத்திலும் தொடரும் நடிகர் விஜய் கடந்த 10 ஆண்டுகளாக அதையே செய்கிறார். இவ்விருவரும் போகிறபோக்கில் செய்யவில்லை; கவனமாகத் திட்டமிட்டுச் செய்கிறார்கள். உச்ச நடிகர் என்ற மலையுச்சியை நோக்கி நகரும்போது தூக்கிச் சுமக்கப் பல்லக்குத்தூக்கிகள் தேவை.

பல்லக்கில் அமருபவர்களைப் பலவிதமாகச் சொல்வார்கள். பொதுவாக அவரைப் பெரியவர்ன்னு சொல்லலாம். சட்டென்று சொல்லவேண்டுமென்றால் முதல்வர் - சிஎம்- என்று சொல்லலாம். ( இனி எனது பல்லக்குத்தூக்கிகள் நாடக வசனம்)

வருவதாகச் சொல்பவர்கள் வராமல் போகலாம்.
ஆனால் நாளைக்கே வரார்னு மாத்திச்சொல்வாங்க. 
வருவதாச்சொன்ன பெரியவர் காணாமலும் போகலாம்.. 
பெரியவர்... பெரியவருக்குப் பெரியவர். அதிபெரியவர், அவருக்குப் பெரியவர்; பெரியவருக்குப் பெரியவர்; பெரியவருக்குப் பெரியவருக்குப் பெரியவர் வரலாம்; வராமலும் போகலாம்..

அதனாலெ பல்லக்குத்தூக்கிகள் அவர்கள் வேலையெச் செய்துகிட்டெ இருக்கணும்..

இதுதான் உச்சநடிகர்களின் எதிர்பார்ப்பு.