ரஜினியின் புதிய படத்துக்கு ‘அண்ணாத்த’ என்று பெயரிடப்பட்டுள்ளது. பட அறிவிப்பு வெளியான உடனே இந்திய அளவில் ட்விட்டரில் ‘அண்ணாத்த’ முதலிடம் பிடித்தது.
‘தர்பார்’ படத்தைத் தொடர்ந்து சிறுத்தை சிவா இயக்கத்தில் ரஜினி  நடித்துவருகிறார். ‘தலைவர் 168’ என்று பெயரிடப்பட்டு நடந்துவரும் ஷூட்டிங்கில் கீர்த்தி சுரேஷ், நயன்தாரா, குஷ்பூ, மீனா, சூரி, பிரகாஷ் ராஜ், சதீஷ் என ஏராளமான நட்சத்திரங்கள் நடிக்கின்றன. இந்தப் படத்தின் படப்பிடிப்புகள் சென்னை, ஹைதராபாத் உள்ளிட்ட இடங்களில் நடைபெற்றுவருகின்றன. 
இந்தப் படம் தீபாவளிக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், படத்தின் பெயர் என்னவென்ற எதிர்பார்ப்பும் இருந்துவருகிறது. இந்நிலையில் இன்று மாலை 6 மணிக்கு ‘தலைவர் 168’ படத்தின் அப்டேட் வெளியாகும் என்று சன் பிக்சர்ஸ் ட்விட்டரில் அறிவித்திருந்தது. இதனையடுத்து ரஜினியின் புதிய படத்துக்கு ‘அண்ணாத்த’ என்று பெயர் சூட்டப்பட்டுள்ளதாக சன்பிக்சர்ஸ் அறிவித்தது. 
அதுதொடர்பாக டைட்டில் வீடியோவையும் சன்பிக்சர்ஸ் வெளியிட்டது. இந்த அறிவிப்பு வெளியான உடனே, அந்தப் பெயரை ரசிகர்கள் ட்விட்டரில் டிரெண்ட் ஆக்கிவிட்டார்கள். இதற்கான ஹாஸ்டேக்குகளை உருவாக்கி, ரஜினி ரசிகர்கள் ட்விட்டரை அதகளப்படுத்திவருகிறார்கள்.