ரஜினிகாந்த் மகள் சௌந்தர்யாவுக்கும் திமுக முன்னாள் அமைச்சர் ஒருவரின் சகோதரர் மகனுக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் பரவி வருகின்றன.

ரஜினிகாந்தின் இரண்டாவது மகள் சௌந்தர்யா. இவருக்கு கடந்த 2010 ஆம் ஆண்டு தொழிலதிபர் அஸ்வின் என்பவருடன் திருமணம் நடந்தது. இவர்களுக்கு வேத் கிருஷ்ணா என்னும் மகனும் உள்ளார். இந்நிலையில் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு விவாகரத்து பெற்று பிரிந்துவிட்டனர். தற்போது சௌந்தர்யா ரஜினிகாந்துடன் அவருடைய போயஸ்கார்டன் வீட்டில் தான் வசித்து வருகிறார். 

விவாகரத்துக்குப் பின் சினிமாவில் ஆர்வம் செலுத்திய சௌந்தர்யா, தனுஷ் நடித்த வேலையில்லா பட்டதாரி 2 என்ற படத்தை இயக்கினார். இதையடுத்து தொழிலதிபர் வணங்காமுடி என்பவரின் மகன் விசாகனுடன் காதல் மலர்ந்து, இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்து ரஜினியின் அனுமதி கேட்டதாகக் கூறப்படுகிறது. 

இதைத்தொடர்ந்து ரஜினியும் விசாகன் குறித்து விசாரித்திருக்கிறார். விசாகனின் தந்தை பெயர் வணங்காமுடி. இவர் தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசின் ஆதரவாளரும் அக்கட்சியின் செய்தித் தொடர்பாளருமான சொர்ணா சுதுராமன் என்பவரின் உறவினர் என்பதால் திருநாவுக்கரசரிடம் விசாகன் பற்றிய விசாரணையை ரஜினி மேற்கொண்டாராம். 

விசாகன் பயோடேட்டா

விசாகன் வெளிநாட்டில் எம்.பி.ஏ., பட்டம் பெற்றவர். தற்போது சென்னையிலேயே தந்தையின் தொழில் கவனித்து வருகிறார். மருந்து நிறுவனம் ஒன்றையும் நடத்தி வருவதாகக் கூறப்படுகிறது. இவர் ஒரு நடிகரும் கூட. ஆம் சமீபத்தில் வெளிவந்த வஞ்சகர் உலகம் என்னும் படத்தில் முக்கிய கதாபாத்திரம் ஒன்றில் நடித்திருக்கிறார். 

சௌந்தர்யா ரஜினிகாந்தைப் போன்றே விசாகனுக்கும் இது இரண்டாம் திருமணம் என்றே கூறப்படுகிறது. இதற்கு முன்னதாக தூத்துக்குடியில் உள்ள ஒரு பிரபல பத்திரிகை அதிபரின் பேத்தியை திருமணம் செய்து கடந்த ஆண்டு விவாகரத்தும் நடந்திருக்கிறது. அதனைத்தொடர்ந்து தற்போது அவர் ரஜினிகாந்த் மகள் சௌந்தர்யாவை இன்னும் ஓரிரு மாதங்களில் மறுமணம் செய்யவிருக்கிறார்.

திமுக முன்னாள் அமைச்சர்

விசாகனுடைய தந்தை தொழிலதிபர் வணங்காமுடி வேறு யாருமில்லை. திமுக முன்னாள் அமைச்சர் பொன்முடியின் சகோதரர் என்பது கூடுதல் செய்தி. ஆடு பகை குட்டி உறவு என்பது போல, திமுகவும் பாஜகவும் எதிரெதிர் துருவங்களில் நிற்க, பாஜகவின் ஆதரவாளர் என்று சொல்லப்படுகிற ரஜினிகாந்தும் திமுகவின் முன்னாள் அமைச்சரும் கூடிய விரைவில் சம்பந்தியாகப் போகிறார்கள்.