ஒரு திரைப்படத்தினைப் பார்த்துக்கொண்டிருக்கும் போது, நாம் நம்முடைய நண்பர்களிடம் "மாப்ள, அந்த சினிமாட்டோகிராபி செமயா இருந்துச்சுடா, அந்த இன்டர்வெல்லுக்கு முன்னாடி இருந்த ஆர்ட் ஒர்க் செமயா இருந்துச்சுடா" என்று பகிர்ந்து கொள்வோம். 

இவ்வாறு, ஒரு திரைப்படத்தில் ஏதேனும் ஒரு குறிப்பிட்டத் துறையை பற்றி மட்டும் பேசுகிறோம் என்றாலே, அங்கு கதைக்கு முக்கியத்துவம் கொடுக்காமல், அந்த துறைக்கு முக்கியத்துவம் கொடுத்து எடுத்துள்ளனர் என்றுதானே அர்த்தம்! சினிமாவைப் பொறுத்த வரை,  அழகியல் என்பது நம்முடைய கண்களை உறுத்தாமல், எதையும் ரொமாண்டிசைஸ் செய்யாமல் கதையின் போக்கில் ஒளிப்பதிவு, படத்தொகுப்பு, இசை, ஒலிப்பதிவு என பார்வையாளர்களால் பிரித்துப்பார்க்க முடியாத அளவிற்கு கையாளப்பட்டிருக்க வேண்டும். 

இவ்வாறு, தன்னுடைய ஒவ்வொரு படங்களிலும் தன்னுடைய வேலை இதுதான் என பார்வையாளர்களால் கண்டறிய முடியாதபடி தன்னுடைய கலை இயக்கத்தினை செய்து வரும் ஒரு இளம் கலை இயக்குனருடன் சிறு கலந்துரையாடல்.

நீங்கள் இதுவரை பணிபுரிந்துள்ள திரைப்படங்களைப் பற்றி கூறுங்கள்?

"நான் இதுவரை 'தரமணி',  'மேயாத மான்', 'அசுரவாதம்' படங்கள்ல ஆர்ட் டைரக்டரா ஒர்க் பண்ணிருக்கேன். ராம் சாரோட அடுத்த படமான 'பேரன்பு' படத்துக்கும் நான் தான் ஆர்ட் டைரக்டர், வரலட்சுமி சரத் குமார் நடிக்கிற 'வெல்வட் நகரம்' படத்துலயும் ஒர்க் பண்ணிருக்கேன். சீக்கிரமே இந்த படங்கள் ரிலீஸ் ஆகும். 

நீங்கள் ஆர்ட் டைரக்டராக அறிமுகமான முதல் படமே இயக்குனர் ராம் அவர்களின் 'தரமணி' திரைப்படம். அந்த வாய்ப்பு எப்படி கிடைத்தது? இயக்குனர் ராம் அவர்களிடம் பணிபுரிந்த அனுபவம் எப்படி?

"நா ஆர்ட் டைரக்டர் ராஜீவன் சார் கிட்ட மந்திரப் புன்னகை, விண்ணைத்தாண்டி வருவாயா, மாற்றான், சிறுத்தை, சகுனி, ராஜபாட்டை, தங்க மீன்கள் படங்கள்ல அசிஸ்டன்ட்டா ஒர்க் பண்ணேன். கடைசியா தங்க மீன்கள் படத்துல ஒர்க் பண்ணும் போது டைரக்டர் ராம் சார் பழக்கம். அப்படி தான் எனக்கு 'தரமணி' வாய்ப்பு கிடைத்தது. ராம் சார் கிட்ட ஒர்க் பண்றது மிகவும் எளிமையான ஒரு விஷயம். நம்மகிட்ட கதையைப் பத்தி சொல்லும்போதே அவருக்கு என்ன வேணுன்னு தெளிவா சொல்லுவாரு. அத நாம பண்ணலே போதும். அவர்கிட்ட இருந்து டைரக்சன் மட்டுமில்ல, ஆர்ட் டைரக்சனும் கத்துக்கலாம்" என்று புன்னகை செய்தபடி பதிலளித்தார்.

பொதுவாக உங்களுடைய படங்களில் ஆர்ட் ஒர்க் இருப்பது என்பதே தெரிவதில்லையே! எப்படி?

"தரமணி படத்துல ஆண்ட்ரியாவும், ஹீரோவும் முதன் முறையா ஒரு பழைய பஸ் ஸ்டான்ட்ல சந்திப்பார்கள் இல்லையா, அதுவே செட் தான். அந்த செட் போட்டப்ப சரியான புயல். அது தான் என்னோட ஃபர்ஸ்ட் செட் வேற, எங்க பறந்துருமோனு பயத்தோட போட்ட செட்டு அது. அப்பறம்,  28 வது மாடில இருந்த ஆண்ட்ரியா வீடு முழுசா கட்டிமுடிக்கப் படமா இருந்தது. அதுக்கு எல்லா ஒர்க்கும் பண்ணி, நாங்க தான் அந்த வீட்டையே உருவாக்குனோம்." என்று சிரித்துவிட்டு, "நீங்க செட் இருக்குறதே தெரியலேனு சொன்னது சந்தோசமா இருக்கு, அப்ப ரியலா செட் போட்டிருக்கனு தானே அர்த்தம். அதுமட்டுமில்லாம நான் இதுவர ஒர்க் பண்ண டைரக்டர் எல்லாருமே கதைக்கு என்ன தேவையோ அத மட்டும் தான் பண்ணுவாங்க. ஓவர் ரொமாண்டிசைஸ் பண்ணமாட்டாங்க, இது ஒரு இயக்குனருக்கு ரொம்ப முக்கியம்னு நெனைக்கிறேன். மேயாத மான்ல ஹீரோ வீடும் நாங்க உருவாக்குனது தான். அது முன்னாடி ஒரு கிறிஸ்டியன் வீடா இருந்ததுனு பதிவு பண்ணிக்கிறேன்"

மம்மூட்டி நடித்திருக்கும் பேரன்பு திரைப்படத்தில் பணிபுரிந்த அனுபவம் எப்படி? 

"தரமணி படத்துக்கு அப்பறமும் ராம் சார் கூட ஒர்க் பண்றது ரொம்ப சந்தோசமா இருக்கு. முதல் படத்துல நான் எப்படி ஒர்க் பண்ணப்போறேன்னு ராம் சாருக்கு ரொம்ப டவுட்டு இருந்துச்சு. அந்த படத்தையும் முடிச்சு, இப்ப பேரன்புல ஒர்க் பண்றது ரொம்ப ஹாப்பி! பேரன்பு படத்துக்காக கொடைக்கானல்ல இருக்க மன்னவனூர்ல ஒரு வீடே செட் தான் போட்டோம். டீசர்ல கூட அந்த வீட்ட நீங்க பாத்திருப்பீங்க. கிட்டத்தட்ட ஃபர்ஸ்ட் ஹாஃப் புல்லா அந்த வீட்ல தான் நடக்கும். அந்த வீடு செட் போட்டப்ப நிறைய கஷ்டங்கள் இருந்தது. ஒரு லேக்க தாண்டிதான் எல்லாப் பொருளையும் கொண்டுபோக முடியும். கொஞ்சம் கொஞ்சமா தான் கொண்டு போய் சேர்த்து அந்த வேலைய முடிச்சோம். கிட்டத்தட்ட 17 நாள் அந்த வீட்டோட செட்ட மட்டுமே போட்டோம்.  செட் போட்டு படம் எடுத்து முடிச்சதுக்கு அப்பறம், 'இது செட்டா!.. இத்தனை நாள் நான் உண்மையான வீடு நினச்சேன்' அப்படினு நடிகை அஞ்சலி சொன்னாங்க. படம் முடிஞ்சு செட்ட ரிமூவ் பண்ற நேரத்துல அத ரிமூவ் பண்ணாதீங்கன்னு அங்க இருந்த ஃபாரஸ்ட் ரேஞ்சர்ஸ் பெரிய பிரச்னையே பண்ணாங்க. ஆனா, ராம் சார் ரொம்ப ஸ்ட்ரிக்ட்டா ரிமூவ் பண்ணனுனு சொல்லிட்டாரு. எல்லாரும் செட் போடுறதுக்கு தான் கஷ்டப்படுவாங்க. ஆனா, நாங்க செட்ட ரிமூவ் பண்ண கஷ்டப்பட்டோம்."

அடுத்து நீங்கள் பணிபுரியவிருக்கும் திரைப்படங்கள் பற்றி?

இன்னும் எதும் கன்பார்ம் ஆகல! சீக்கிரமே அடுத்த படத்துக்கான அறிவிப்பு வரும்" என்று  கூறி நம்மிடம் இருந்து விடைபெற்றார் குமார் கங்கப்பன்.