* எத்தனை அச்சுறுத்தல்கள் வந்தாலும் அரசியல் களத்தில் ரஜினிகாந்த் வந்து நிற்பது உறுதியாக நடந்தே தீரும். ரஜினி எதைச் சொன்னாலும் அதை பிரச்னையாக மாற்றிட தமிழகத்தில் சிலர் புறப்பட்டு இருக்கிறார்கள். இதற்கு ஒரே காரணம், ரஜினி மீது அவர்களுக்கு இருக்கும் பயம்தான். தங்களின் முதல்வர் கனவு தகர்கிறதே எனும் அச்சம் அவர்களுக்கு. -தமிழருவி மணியன் (ரஜினியின் அரசியல் ஆலோசகர்)

* எங்களின் எம்.எல்.ஏ.க்களை வைத்துத்தான் பத்து வருடங்களுக்கு முன்பு தி.மு.க.வின் ஆட்சி ஓடியது. நாங்கள் அப்போது பெருந்தன்மையோடு நடந்து கொண்டோம். அதே பெருந்தன்மையை இப்போது நாங்கள் உங்களிடத்தில் எதிர்பார்ப்பதில் என்ன தவறு இருக்கிறது? இல்லாவிட்டால் ‘எங்களுக்குப் பெருந்தன்மை இல்லை’ என்று வெளிப்படையாக சொல்லிவிடுங்களேன் தி.மு.க. -வேலுச்சாமி (காங்கிரஸ் நிர்வாகி)

* சின்னம்மாவிடமிருந்து அ.ம.மு.க. பொதுச்செயலாளர் தினகரன் பிரிந்துவிட்டார் என்று சிலர் வதந்தியை பரப்புகிறார்கள். அந்த தாய் மகன் உறவு என்றும் நிலைத்திருக்கும். தினகரனை சிறுவயதில் வளர்த்தவர் சின்னம்மா. அவரைக் கேட்டுதான் தினகரன் கட்சியே துவக்கினார், கொடியை வடிவமைத்தார். சின்னம்மா சசிகலாவின் வழிகாட்டுதல்படிதான் கட்சியே இயங்குகிறது. -    சி.ஆர்.சரஸ்வதி (அ.ம.மு.க. கொள்கை பரப்புச் செயலாளர்)

* துணை முதல்வர் பன்னீரின் சொந்தமாவட்டமான தேனியில், ஆளுங்கட்சியை விட கூடுதலான ஒன்றியக் கவுன்சிலர் பதவிகளை எங்கள் கட்சி பெற்று, பண நாயகத்துக்கு சவுக்கடி கொடுத்திருக்கிறது. உதயசூரியன் சின்னத்தில் வென்றவர்களை, வெட்கமே இல்லாமல்  கடத்திச் சென்று தங்கள் கட்சிக்குள் இணைத்துள்ளனர். தில் இருந்தால் ஓ.பி.எஸ். நேரடியாக மோதிப்பார்க்கட்டுமே. ஏன் இந்த நாடகமெல்லாம்? இப்படி ஆளை தூக்கி தேர்தலை நிறுத்துவதை விட, எங்களிடம் பிச்சை கேட்டு தலைவர் பதவியை பெற்றிருக்கலாமே!-ராமகிருஷ்ணன் (தேனி மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர்)

* பா.ஜ.க.விடம் இருந்து ஒதுங்க அ.தி.மு.க. நேரம் பார்த்துக் கொண்டிருக்கிறது. அமைச்சரவையில் அனைத்து அமைச்சர்களும் குடியுரிமை சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். (21-01-2020 அன்று இளையான் குடியில்) பா.ஜ.க.வுடனான அ.தி.மு.க.வின் உறவை பிரிக்கவே முடியாது. குடியுரிமை சட்டம் குறித்து பா.ஜ.க.விடம் முறையிட்டு வருகிறோம். சட்டசபையிலும் வலியுறுத்தியுள்ளோம். (22-01-2020 அன்று காரைக்குடியில்)’-    பாஸ்கரன் (தமிழக அமைச்சர்)

* பா.ஜ.க. கூட்டணியில் இருந்து அ.தி.மு.க. வெளியேறுவது குறித்து அமைச்சர் பாஸ்கரன் பேசியது அவரது சொந்தக் கருத்து. கட்சியின் கருத்தல்ல. கூட்டணி குறித்த முடிவுகளை கட்சியின் தலைமை மட்டுமே எடுக்கும். இரு கட்சிக்கும் இடையிலான உறவு இப்போது வரை நீடித்து வருகிறது. பெரியார் விஷயத்தில், நடக்காத ஒரு விஷயத்தை கூறி ரஜினி தமிழக மக்களை திசை திருப்பி வருகிறார். -    ஜெயக்குமார் (மீன் வளத்துறை அமைச்சர்)

* ஈ.வெ.ரா. என்னதான் தீவிரமாக கடவுள்களை எதிர்த்து பேசினாலும், நாகரிக அரசியல் செய்தவர். குன்றக்குடி அடிகளார் விபூதி பூசியபோது அதை தடுக்காமல் ஏற்றவர். அவரைப் பற்றி நன்கு தெரியாமல் ரஜினி பேசியது தவறு. -    திருமாவளவன் (விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர்)

* தி.மு.க.வின் தலைவராக கருணாநிதி, அவரது மகன் ஸ்டாலின், அவரது மகன் உதயநிதிதான் வரமுடியும். ஆனால் அ.தி.மு.க.வில் சாதாரண தொண்டர் கூட தலைவராக முடியும். யார் வேண்டுமானாலும் முதல்வராக முடியும், அமைச்சராக முடியும். -எடப்பாடி பழனிசாமி (தமிழக முதல்வர்)

* மத்தியில் ஆளும் பா.ஜ.க. அரசு எப்போது தமிழர்களின் நலனுக்கு எதிரான நிலைப்பாட்டையே கொண்டுள்ளது. பெரிய திட்டங்கள் எதையும் தமிழகத்தில் செயல்படுத்தவில்லை. அதேவேளையில் தமிழகத்தை இம்சிக்கும் திட்டங்களை உடனடியாக செயல்படுத்திட முனைகிறது. இதை தமிழர்கள் நன்கு புரிந்து வைத்தே, அக்கட்சியை வன்மையாக எதிர்க்கிறார்கள். -சஞ்சய் தத் (தமிழக காங்கிரஸ் பொறுப்பாளர்)

*  மக்கள் ரஜினியை தவிர்த்து வருகிறார்கள் என்பது உண்மை. வரும் காலங்களில் விஜய்குதான் நல்ல மவுசு இருக்கும். ரஜினி படம் எப்போது வந்தாலும் வெற்றி பெறும், வசூல் குவியும்! என தயாரிப்பாளர்களும், வினியோகஸ்தர்களும் நம்புவது தவறு. தர்பார் படம் தவறான நாளில் ரிலீஸானதால், படச்செலவில் ஒரு பாதியை மட்டுமே எடுக்க முடிந்திருக்கிறது லைகா நிறுவனத்தால். -    ராஜன் (சினிமா தயாரிப்பாளர்)
: