விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் முக்கிய தொடர்களில் நெம்பர் ஒன் இடத்தை பிடித்த சீரியல் பாண்டியன் ஸ்டோர்ஸ். இதில் கதிர் - முல்லை ஜோடிக்கு என தனி ரசிகர்கள் பட்டாளமே உண்டு. இதில் முல்லை கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்கள் மனதை கவர்ந்த சித்ரா தற்கொலை செய்து கொண்ட சம்பவம் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. 

 

முல்லை கதாபாத்திரத்தில் தொகுப்பாளினி, நடிகை, மாடலிங் என பல்வேறு துறைகளில் கலக்கிய சித்ரா நடித்து வருகிறார். ஆரம்பத்தில் மக்கள் தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக பணியாற்றி வந்த சித்ரா, சன் டி.வியில் ஒளிபரப்பான சின்ன பாப்பா, பெரிய பாப்பா சீரியல் மூலமாக நடிக்க ஆரம்பித்தார். கடந்த ஆகஸ்ட் மாதம் சித்ராவிற்கும் தொழிலபதிர் ஹேமந்த் என்பவருக்கும் சென்னையில் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. 

 

விரைவில் திருமணம் நடைபெற இருந்த நிலையில், சென்னை, நசரத் பேட்டையிலுள்ள ஹோட்டலில் சேலையில் தூக்கு மாட்டி தற்கொலை செய்துள்ளார். சித்ராவின் வீடு திருவான்மியூரில் உள்ளது. படப்பிடிப்பில் பங்கேற்பதற்காக நட்சத்திர ஓட்டலில் தங்கிய சித்ராவுடன் வருங்கால கணவர் ஹேமந்தும் தங்கியுள்ளார். இந்நிலையில் ஹேமந்த் வெளியே சென்ற போது சித்ரா அறையை பூட்டிக்கொண்டு திறக்க மறுப்பதாக ஓட்டல் நிர்வாகத்திடம் தெரிவித்துள்ளார். இதையடுத்து ஓட்டல் ஊழியர்கள் மாற்று சாவியைக் கொண்டு அறையை திறந்த போது,சித்ரா சடலமாக தூக்கில் தொங்கியுள்ளார். இதுகுறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.