மவுன ராகம் வாசித்து வந்த அதிமுகவினர் ஜெயலலிதா மறைவுக்கு பிறகு மைக் மோகன்களாகி கண்டதையும் பேசி கழகத்திற்குள் கலகம் ஏற்படுத்தி விட்டனர். இதனால், வாய்ப்பூட்டு போட உத்தரவிட்டு இருக்கிறது அதிமுக தலைமை. 

அதிமுக சார்பில் பத்திரிக்கைகள் மற்றும், ஊடகங்கள் வழையாகவும், இன்னபிற சமூக தொடர்பு சாதனங்கள் வழியாகவும் கருத்துக்களை தெரிவிக்கும் பணிக்கென கழக செய்தி தொடர்பாளர்கள் நியமிக்கப்பட்டிருக்கிறார்கள்.அதிமுகவின் நிலைப்பாடு என்ன என்பதையும்  அதிமுகவின் சிந்தனை ஓட்டம் எத்தகையது என்பதையும் அதிமுக நிர்வாகிகள் ஒப்புதலை பெற்று கருத்துக்களை மட்டுமே தெரிவிப்பதற்கு உரிமை பெற்றவர்கள். தலைமை கழகத்தில் இருந்து அடுத்த அறிவிப்பு வரும் வரையில் எந்த ஒரு ஊடகத்திலும், பத்திரிக்கைகளிலும் சமூக தொடர்பு சாதனங்களிலும் எத்தகைய கருத்தையும், தெரிவிக்க வேண்டாம். 

மற்றவர்கள் யாரும் பத்திரிக்கைகளிலோ, ஊடகங்களிலோ, இன்னபிற சமூகத்தொடர்பு சாதனங்களிலோ தங்கள் கருத்துக்களை  அதிமுகவின் கருத்துக்களாக தெரிவிக்கக்கூடாது. அத்தகைய நடவடிக்கைகளில் ஈடுபடுவோர் மீது ஒழுங்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்’’ என அதிமுக தலைமை உத்தரவிட்டு இருக்கிறது. 

ஜெயலலிதா காலத்தில் அவரை மீறி கட்சி பற்றி யாரும் கருத்துக் கூற முடியாத நிலை இருந்தது. அதே நிலை அதிமுக உத்தரவிட்டும் தொடருமா? எனக் கேள்வி எழுந்துள்ளது. குறிப்பாக அமைச்சர் பெருமகன்களாகிய ராஜேந்திரபாலாஜி, ஜெயகுமார், திண்டுக்கல் சீனிவாசன், செல்லூர் ராஜுக்கு இந்த அறிவிப்பு அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கும்.

 

குறிப்பாகன் இவர்கள் மைக் கிடைத்து விட்டால் மாய்ந்து மாய்ந்து பேசுவதை வழக்கமாக்கி கொண்டவர்கள். இவர்களில் சிலரது பேச்சு  எப்பவும் இப்படித்தானா? அல்லது இப்படித்தான் எப்போதுமா என கேள்வி எழும் வகையில் உளறல்களும் சர்ச்சை பேச்சுகளும் சமூக வலைதளங்களில் சதிராடி வந்தன. 

இந்த உளறல்கள், சர்ச்சைகளில் அமைச்சர் செல்லூர் ராஜு, திண்டுக்கல் சீனிவாசனுக்கும் இடையே கடும் போட்டி நிலவி வந்தது. தொடர்ச்சியாக நீண்டுகொண்டிருக்கும் இந்த உளறல் மற்றும் சர்ச்சை போட்டியில் மீண்டும் புதிய சகாப்தம் படைத்தவர் அமைச்சர் செல்லூர் ராஜு. 

வைகை நீர் ஆவியாகாமல் தடுக்க தெர்மோகோல் கொண்டு அணையைக் கொண்டு மூட முயற்சிக்க அது உலக அளவில் டிரென்ட் ஆனது. இவருக்கு டஃப் கொடுத்தவர் திண்டுக்கல் சீனிவாசன். டி.டி.வி.தினகரன் மூலம் 18 எம்.எல்.ஏ-க்களும் ஜெயலலிதாவால் கொள்ளையடிக்கப்பட்ட பணத்தை, பெற்றுக்கொண்டு, தற்போது தினகரனுடன் சேர்ந்து மக்களை ஏமாற்றுகிறார்கள்' என்று ஒப்புதல் வாக்குமூலமே கொடுத்தார். இதையெல்லாம் தூக்கி சாப்பிடுவது போல மன்னித்து விடுங்கள் மக்களே அம்மா இட்லி சாப்பிட்டாங்க, சட்னி சாப்பிட்டாங்க என்று நாங்க சொல்வதெல்லாம் பொய் என்று போட்ட போடில் பெங்களூரு பரப்பன அக்ரஹாரம் முதல் மெரீனா கடற்கரை வரை ஆடி அடங்கியது.

 

அடுத்து அதிரடியாக இவர்களுக்கு டஃப் கொடுக்க களமிறங்கியவர் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி. மோடி தான் எங்கள் டாடி என அதிர வைத்தார். கிடைக்கிற கேப்பில் எல்லாம் மைக்கில் சிந்து பாடினார். இவர்கள் அளவுக்கு உளறவில்லை என்றாலும், அதிமுக அமைச்சர்களிலேயே அதிகம் மைக் பிடித்த சாதனைக்கு சொந்தக்காரராக இருப்பவர் அமைச்சர் ஜெயகுமார். அதிமுகவில் யார் தும்மினாலும், யார் விம்மினாலும் அண்ணன் முன் மீடியாக்களின் மைக்குகள் வரிசகட்டும். இவர்களுக்கெல்லாம் அதிமுக தற்போது உத்தரவிட்டுள்ளது பொருந்துமா? 

அல்லது அந்த உத்தரவுகளை மீறி இவர்களால் இருக்க முடியுமா? என்கிற இரட்டை கேள்விகள் எழுந்துள்ளது. மைக் முன் நின்றே பழக்கப்படுத்தி கொண்ட இவர்களின் நிலைமையை நினைத்து கலக்கத்தில் இருக்கிறார்கள் அதிமுகவினர். இரட்டை தலைமை, ஒற்றைத் தலைமை என்பதெல்லாம் மீறி இவர்கள் மைக் படிக்காமல் இருக்கப்போவதை நினைத்து கலங்கித் தவிக்கிறார்கள் ரத்தத்தின் ரத்தங்கள். 

எல்லாம் ஒற்றைத் தலைமை கேட்டு மைக் பிடித்த ராஜன் செல்லப்பாவால் வந்த வினை என அவர் மீது ஆத்திரத்தில் இருக்கிறார்களாம் இந்த அமைச்சர்கள்..!